காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தலித் மக்களைத் தொடர்புப்படுத்தி பேசிய பேச்சுக்காக, யோகா குரு பாபா ராம் தேவ் மீது பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில உணவு அமைச்சருமான ஷ்யாம் ரஜக் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாயன்று நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக தலித் மக்களின் வீட்டுக்கு சென்று வருவதைப் பற்றி கடந்த ஏப்ரல் 25ம் தேதி பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அவர் சுற்றுலா மற்றும் தேனிலவுக்கு சென்று வருவது போல் அங்கு செல்வதாக ஏளனம் செய்தார்.
இது போன்ற இழிவு படுத்தும் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய காங்கிரஸ், அவர் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியது.
அதைப்போல் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி இது குறித்து குறிப்பிடுகையில், இந்த கருத்தின் மூலம் தலித் மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
பாபா விளக்கம்
இது தொடர்பில் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த சூழலில், பாபா ராம்தேவ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்தார்.
தலித் மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் இவ்வாறு தாம் கூறவில்லை என்றும், அவ்வாறு கருதுவோரிடம் தாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.
தேசிய தேர்தல் ஆணையம் இவரது கருத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் வரும் மே மாதம் 16ம் தேதி வரை அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது.
மக்களிடயே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் எந்த விதமான பேச்சு அமைந்தாலும் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
டி.ராஜா கருத்து
இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பாபா ராம்தேவ் உட்பட அனைவரும் சட்ட வரையறைக்கு உட்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.
அரசியல் லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம் என்கிற எண்ணம் பெருகி வருவதாக வருத்தம் தெரிவித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களை பற்றி கருத்து கூறுவோர் அவர்களது மனம் வருந்தாத வகையில் பேச வேண்டும் என்றார்.
இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் பாபா ராம்தேவ், தலித் மக்களை சில அரசியல் கட்சிகள் தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
தாம் கூறிய பேச்சுக்கு தவறான அர்த்தத்தை கொடுத்து, தலித் மக்களை தனக்கு எதிராக திசை திருப்பும் நோக்கோடு அவர்கள் செயல்படுவதாகவும் குறை கூறினார். -BBC
தாழ்த்த பட்ட, பிற்படுத்த பட்ட மக்களே உங்களுக்கு இவளவுதான் மரியாதை கொடுகுறான்கள், இந்த உயர்ந்த ஜாதியினர்.