தமிழக அரசியல் அதிகாரத்தை மதிமுக கைப்பற்றும்: வைகோ நம்பிக்கை

தமிழக அரசியல் அதிகாரத்தை மதிமுக கைப்பற்றும் நாள் வந்துதான் தீரும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

1994-ஆம் ஆண்டு மே 6-ஆம் நாள் தியாகத் தடாகத்தில் பூத்தது மதிமுக. நடந்து முடிந்த 16ஆவது மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழக மக்களின் எல்லையற்ற அன்பையும், நன்மதிப்பையும் பெற்றிருக்கிறோம் என்பதை கண்கூடாகக் கண்டோம்.

இதுவரை மதிமுகவினர் இன்னல்களை ஏற்றுக் கொண்டு, தோல்விகளைச் சகித்துக் கொண்டு பணியாற்றி வந்துள்ளனர்.

கூரிய கற்களும், முட்களும் நிறைந்த பாதைகளில் பாதங்கள் ரணமாக கடந்து வந்துள்ளனர்.

இனிமேல் நாம் செல்லும் பாதை செப்பனிடப்பட்டதாகவே இருக்கும். மக்களவைத் தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் நம் மீது எல்லையற்ற பரிவினையும் அன்பையும் பொழிந்தனர்.

நான் ஏற்கெனவே கணித்துக் கூறியவாறு தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவே அமையும்.

மதிமுகவினர் இனிமேல் ஆற்றவேண்டிய பணிகள்தான் மிகவும் முக்கியமானவை ஆகும்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் நாம் கவர்ந்துள்ளோம்.

நான் (வைகோ) எனது பிறந்த நாளைக் கொண்டாடுவது இல்லை. மதிமுக பிறந்த நாளான மே 6 ஆம் நாளையும்  அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் நாளையும், தைப் பொங்கல் திருநாளையும்தான் நாம் கொண்டாடி வருகிறோம். இந்த 3 நாள்களும் நமக்கு உவகை ஊட்டும் உன்னத திருநாள்கள் ஆகும்.

எனவே, மே 6-ஆம் நாள் அன்று தமிழகத்தில் அனைத்து மாநகரங்கள், நகரங்கள், பேரூர்கள், ஒன்றியங்கள், வட்டக் கழகங்கள், கிளைக் கழகங்கள் ஆகிய இடங்களில் மதிமுகவினர் சார்பாக கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற வேண்டும்.

கொடி மரம் இல்லாத இடங்களில் புதிதாகக் கொடி மரம் அமைத்தல், ஏற்கெனவே இருக்கும் கொடி மரங்களில் மதிமுகவின் வண்ணத்தைப் பூசி, மதிமுக கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கச் செய்தல் ஆகிய பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேற்கொள்ள வேண்டும்.

மே 6-ஆம் நாள் அன்று சர்க்கரைப் பொங்கல் வழங்குதல், இனிப்புகள் வழங்குதல் மாணவச் செல்வங்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்-உபகரணங்கள் வழங்குதல், ரத்த தான முகாம்கள் அமைத்தல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட வேண்டுகிறேன்.

2012இல் கரூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில், “முன்னேறிச் செல் அதிகாரத்தைக் கைப்பற்று’ என பிரகடனம் செய்தேன்.

முன்னேறிச் செல்கின்றோம், தமிழக அரசியல் அதிகாரத்தையும் நாம் கைப்பற்றும் நாள் வந்துதான் தீரும் என்று அவர் கூறியுள்ளார்.

TAGS: