காஷ்மீர் பண்டிட்டுகளை வெளியேற்றியதுதான் மதவாதம்: ஃபரூக் அப்துல்லாவுக்கு மோடி பதிலடி

“ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குடும்பத்தினரின் ஆட்சிக் காலங்களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதுதான் மதச்சார்பின்மைக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதல்’ என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, “மதவாதியான மோடிக்கு வாக்களிப்பவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும்’ எனவும்,”மதவாத பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும்’ எனவும் கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள காணொலி அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மதவாதம் காரணமாக யாரையும் கடலுக்குள் மூழ்கடிப்பதற்கு முன்பு முதலில் ஃபரூக் அப்துல்லா தனது முகத்தையும், தனது தந்தை (ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லா) முகத்தையும் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் பண்டிட்டுகளை அந்த மாநிலத்தை விட்டு விரட்டியடித்தவர்களுக்கு மதச்சார்பின்மை பற்றிப் பேச தகுதியில்லை.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மதச்சார்பின்மை, ஷேக் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா மற்றும் அவரது மகனும் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான ஒமர் அப்துல்லா ஆகியாரின் அரசியலால் நிலைகுலைந்து போய்விட்டது.

இந்தியாவில் மதத்தின் காரணமாக பண்டிட்டுகள் தங்கள் சொந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்ட ஒரே இடம் காஷ்மீர்தான்.

சர்ச்சைக்குரிய கருத்துகள்: தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு சிலர் (பாஜகவினர்) கூறும் சர்ச்சைக்குரிய கருத்துகளாலேயே சிதைந்துவிடும் அளவுக்கு இந்தியாவின் மதச்சார்பின்மை பலவீனமானதல்ல.

“ஜெய் ஜகத்’ (உலகம் வெல்லட்டும்), “வசுதைவ குடும்பகம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) ஆகிய கோட்பாடுகளை இந்தியா எப்போதும் கைவிடாது என்று அந்த அறிக்கையில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

“மோடியின் கொள்கைகளுக்குத்தான் எதிர்ப்பு’: இதற்கிடையே, “நரேந்திர மோடிக்கு வாக்களிப்பவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும்’ என்று தாம் கூறியது, தனிப்பட்ட முறையில் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்து அல்ல என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் திங்கள்கிழமை அவர் கூறுகையில், “”நரேந்திர மோடி என்ற தனிநபருக்கு நான் எதிரானவன் அல்ல. எனது கருத்துகள் அனைத்தும், முஸ்லிம்கள் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு விரோதமான அவரது கொள்கைகளுக்கு எதிரானவைதான்.

மோடியின் முதல் நோக்கமே, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக உள்ளது. அதன் மூலம் அரசியல் சாசனம் அர்த்தமற்றதாக்கப்பட்டு, நாங்கள் அவர்களது அடிமைகளாக்கப்படுவோம். இதனை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இரண்டாவதாக, அவர் முஸ்லிம்களுக்கான ஷரியத் சட்டத்தை நீக்கிவிட்டு, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர முயல்கிறார். இதை முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள்” என்று கூறினார்.

TAGS: