ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

7 arguistsராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் விடுதலை ஆவார்கள் என்றுதான் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஊரெங்கும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த பலரும், அற்புதம் அம்மாளுக்கு வாழ்த்துகளைச் சொல்லத் தொடங்கியிருந்தனர்.

விடுதலையானதும் செங்கொடியின் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, அப்படியே கேரளாவுக்குச் சென்று முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரைச் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்ற பேரறிவாளனின் ஆசையை நிறைவேற்ற திட்டம் வகுத்திருந்தார் அற்புதம் அம்மாள்.

கடந்த 25-ம் தேதி அதிகாலையே கோயம்பேட்டில் தாரை தப்பட்டைகளோடு கூடியிருந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இடியாக இருந்தது.

கதறியழுத அற்புதம்மாளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அனைவருமே கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தனர்.

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த மறுநாள் 25-ம் தேதி தீர்ப்புச் சொன்ன உச்ச நீதிமன்றம், ”இதுபோன்ற சிக்கலான வழக்கை உச்ச நீதிமன்றம் சந்திப்பது இதுவே முதல் முறை.

இந்தச் சிக்கலான வழக்கில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் கூடி முடிவு எடுக்க வேண்டும். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா இல்லையா என்பது பற்றி அவர்கள் முடிவு எடுக்க வேண்டும்” என்று அறிவித்தது.

ஏழு பேர் விடுதலை விவகாரம் மீண்டும் சிக்கல் ஆனது.

இதுபற்றி தோழர் தியாகு கருத்து கூறுகையில்,

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. ஆனால், இந்த வழக்கு விடுதலை தொடர்பான வழக்கு அல்ல, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம், மாநில அரசுக்கு உண்டா இல்லையா என்பதுதான் வழக்கு.

அரசியல் சாசனப் பிரிவு 161-ன் படி ஆயுள் கைதியை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று தமிழக அரசு சரியாகவே வாதிட்டது. ஆனால், விடுதலை செய்வதற்கு முன்பு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டுமா… அல்லது, கலந்தாய்வு செய்தால் போதுமா என்பதுதான் சிக்கல்.

மத்திய அரசோ, ‘இது சி.பி.ஐ. விசாரித்த முன்னாள் பிரதமர் கொல்லப்பட்ட வழக்கு. எல்லா வழக்குகளிலும் ஆயுள் கைதிகளை விடுவிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் கொடுத்துவிடக் கூடாது. கொல்லப்பட்டவர் முன்னாள் பிரதமர். ஆகவே, இதில் விதிவிலக்குகள் வேண்டும்’ என்றது.

ஏற்கெனவே 2011-ல் தூக்குத் தண்டனை பற்றிய தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்கு மத்திய அரசு எந்த பதிலையும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஏழு பேர் விடுதலை தொடர்பாக மூன்று நாட்களுக்குள் பதில் வேண்டும் என்று மாநில அரசு சொன்ன போது, உச்ச நீதிமன்றம் சென்றது மத்திய அரசு.

கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் உள்ள முரண்பாடுகளால் ஒரு முடிவுக்கு வர இயலாத நீதிமன்றம், இந்தச் சிக்கலுக்கு அரசியல் சாசன அமர்வு பெஞ்ச் முடிவு காணட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஒரு முடிவு வந்துவிட்டால், இனி தீர்ப்புகளில் குழப்பம் ஏற்படாது.

இது தொடர்பாக மாநில அரசுகளின் அதிகாரங்கள் வரையறுக்கப்படும். ஆனால், பெஞ்சில் அமர்ந்திருக்கும் நீதிபதிகளில் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

மூன்று மாதங்களுக்கு மேல் விவாதித்து முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துதான் தீர்ப்பு வரும்.

ஆனால், இதை எல்லாம்விட முக்கியமாக தமிழக அரசால் செய்ய முடிந்த ஒரு விஷயம் இருக்கிறது. முன்பு புலவர் கலியபெருமாள் உள்ளிட்டோருக்கு வழங்கிய காலவரையற்ற பரோல் விடுதலையை, இந்த ஏழு பேருக்கும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் என்றார்.

கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறுகையில்,

நிச்சயம் என் மகன் விடுதலையாகி வருவான் என்று நம்பியிருந்தேன். நான் மட்டுமல்ல… அனைவருமே அதுபோல எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இதில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், மத்திய அரசை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி சதாசிவம் முன்னரே கூறிவிட்ட நிலையில், ஏன் இப்போது இப்படி தீர்ப்பே சொல்லாமல் பொறுப்பைத் தட்டிக் கழித்தார் என்று தெரியவில்லை.

இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை. பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

தீர்ப்பு வந்ததும் வேலூர் சிறையில் பேரறிவாளனைச் சந்தித்தேன். ‘நாம் சோர்ந்து போகக் கூடாது அம்மா. நீதியின் கதவுகளை தட்டித் தட்டித்தான் இந்த வழக்கில் இவ்வளவு முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம். நாம் எந்த தப்பும் செய்யவில்லை. ஆகவே போராடுவோம்’ என்றான்.

நான் தமிழக முதல்வரை நம்பியிருக்கிறேன். என் மகன் விடுதலையாவது முதல்வர் கையிலேயே இருக்கிறது” என்றார்.

தூக்குக் கயிற்றில் இருந்து தப்பி மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் தொடர்பான வழக்காக மாறிவிட்டது இந்த ஏழு பேரின் வழக்கும்.

ஆனால், அத்தனை பேரும் தமிழக முதல்வரிடம் எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். இவர்கள் ஏழு பேரையும் காலவரையற்ற பரோலில் விட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

TAGS: