குஜராத்தில் மோடி மீது 2 வழக்குகள் பதிவு: தேர்தல் விதிமீறல் புகார்

தேர்தல் விதிகளை மீறியதாக குஜராத்தில் அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி, மோடி மீது இந்த 2 வழக்குகளை குஜராத் மாநில போலீஸார் புதன்கிழமை பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், காந்திநகர் தொகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் அமைக்கப்படிருந்த வாக்குச் சாவடியில், நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த அவர், தனது கையில் பாஜக தேர்தல் சின்னமான தாமரையை வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தாமரை சின்னத்தை கையில் பிடித்த வண்ணம் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது அவர், தேர்தலில் அதிக இடங்களில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், மத்தியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.

7ஆம் கட்ட தேர்தல் நடைபெற்ற தொகுதிகளுக்கான பிரசாரம், திங்கள்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. எனவே அன்றிலிருந்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசார நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது. இந்நிலையில், வாக்களித்துவிட்டு வெளியே வந்த பின்னர் பாஜக தேர்தல் சின்னத்தை மோடி காட்டியதும், பாஜகவுக்கு வாக்களிக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்து பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தேர்தல் விதிகளை மீறியதற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தின. மேலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் சட்ட விவகாரத்துறை செயலாளர் கே.சி. மித்தல் புகார் அளித்தார்.

அதில், “வாக்களித்து விட்டு வெளியே வந்து தனது கட்சி சின்னத்தை மோடி காட்டியதும், தனது கட்சிக்கு ஆதரவு கேட்டு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126ஆவது பிரிவுக்கு எதிரானது ஆகும். இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் விதிகளை மீறும்வகையில் நடந்து கொண்ட மோடியை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோல் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில அமைப்பாளர் சுக்தேவ் படேல், மோடிக்கு எதிராக தங்கள் கட்சியும் புகார் அளிக்க இருப்பதாக கூறினார்.

தேர்தல் ஆணையம் உத்தரவு: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், “குஜராத் மாநிலம் முழுவதும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் புதன்கிழமை தேர்தல் நடைபெறும் நிலையில், மோடியின் நடவடிக்கைகள் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126(1)(ஏ) மற்றும் 126 (1)(பி) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளன.

எனவே நரேந்திர மோடி மற்றும் அவர் பங்கேற்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை புதன்கிழமை மாலை 6 மணிக்குள் குஜராத் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மோடியின் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் மற்றும் அவரது பிற தேர்தல் நடவடிக்கைகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் மற்றும் பிற மின்னணு ஊடகங்களும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 121(1)(பி) பிரிவை மீறியுள்ளன. எனவே அவற்றுக்கு எதிராகவும் தனியாக வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்’ என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிகளை மீறியதாக மோடி மீது 2 வழக்குகளை குஜராத் போலீஸார் புதன்கிழமை பதிவு செய்தனர். இதுகுறித்து ஆமதாபாத்தில் செய்தியாளர்களிடம் அந்நகர காவல்துறை ஆணையர் சிவானந்த் ஜா பேசுகையில், “தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று மோடி மீது முதல் தகவல் அறிக்கைகள் (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்துக்கும் இதுதொடர்பாக அறிக்கையை அனுப்பியுள்ளோம்’ என்றார்.

குஜராத் டி.ஜி.பி. பி.சி. தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “மோடியின் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது தொடர்பாக, நகர குற்றப்பிரிவில் 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

 

“மறக்க முடியாத நாள்’

“”எனது வாழ்நாளில், என் மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான். இது எனக்கு மறக்க முடியாத நாள்” என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புதன்கிழமை அவர் பேசுகையில், “தேர்தல் ஆணைய உத்தரவுப்படி என் மீது குஜராத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதிக்கு வந்த பிறகுதான், என் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது எனக்கே தெரியும்.

தவறான பாதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டினேன் என்றோ, வாகனங்களை அனுமதியில்லாத இடத்தில் நிறுத்தினேன் என்றோ என் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்யப்பட்டது கிடையாது.

எனது வாழ்நாளில் இதுவரை என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இதுதான். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளான ஏப்ரல் மாதம் 30ம் தேதியை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது.

கத்தியையோ,துப்பாக்கியையோ காட்டி மிரட்டினால் வழக்குத் தொடர்வார்கள். ஆனால், தாமரைச் சின்னத்தைச் காட்டியதற்காக என் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க இருக்கிறது. தேநீர் விற்று தனது வாழ்நாளை கழித்த நபர் ஒருவர், தேர்தலில் தனக்கு சவாலாக இருப்பதை கண்டு அக்கட்சி கவலை அடைந்துள்ளது’ என்றார்.

TAGS: