சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: பெண் என்ஜினீயர் பலி; 14 பேர் காயம்

blast7aசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் பெண் என்ஜினீயர் ஒருவர் பலியானார்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 14 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9ஆவது நடைமேடைக்கு வியாழக்கிழமை காலை 7.05 மணிக்கு வந்தது.

காலை 7.18 மணிக்கு அந்த ரயிலின் எஸ் 4 பெட்டியில் ஒரு குண்டு வெடித்தது. இதனையடுத்து அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதைத்தொடர்ந்து, 7.21 மணிக்கு எஸ் 5 பெட்டியில் பெரும் சப்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. இதையடுத்து பயணிகள் பீதியுடன் அங்கும் இங்கும் ஓடினர்.

குண்டு வெடித்த பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் காயத்துடன் நடைமேடையில் சரிந்து விழுந்தனர். உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இளம் பெண் பலி: விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும் ரயில்வே போலீஸாரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அவரது பெயர் சுவாதி (24) பெங்களூருவில் மென் என்ஜினீயராக பணியாற்றுகிறார் என்பதும் அவர் பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு சென்று கொண்டிருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

குண்டு வெடிப்பில் காயமடைந்த 14 பேரும் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சோதனை: குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில நிமிஷங்களில் குவாஹாட்டி ரயிலில் இருந்த பயணிகள் உடமைகளுடன் வெளியேற்றப்பட்டனர். பயணிகளின் சூட்கேஸ்கள், பைகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. மற்ற பெட்டிகளிலும் குண்டுகள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என்று மோப்ப நாய்கள் வர வழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து காவல் துறையின் அனைத்து படை பிரிவினரும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். சுமார் 700லிக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5 நுழைவாயில்களில் மூன்று மூடப்பட்டன. பின்னர் போலீஸார், ரயில் நிலையத்தை முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இரண்டு நுழைவாயில்களில் மட்டும் பயணிகள் சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு தடயஅறிவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரயில்பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தினர். மேலும் தண்டவாளங்களில் சிதறிக்கிடந்த வெடிகுண்டு துகள்களையும் சேகரித்தனர். மோப்ப நாய் சோதனைக்குப் பிறகு சேதமடைந்த இரண்டு பெட்டிகளும் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பின்பு குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைப்பதற்கான இரண்டு புதிய பெட்டிகள் வரவழைக்கப்பட்டன. பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின் அவர்கள் மீண்டும் ரயிலில் ஏற்றப்பட்டு, பகல் 12.15 மணிக்கு அந்த ரயில் குவாஹாட்டி நோக்கி புறப்பட்டது.

இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறியதாவது: இச்சம்பவத்தில் உயிரிழந்த இளம் பெண் சுவாதியின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும், படுகாயமடைந்தவருக்கு 25 ஆயிரமும், லேசான காயமுற்றோருக்கு ரூ. 5 ஆயிரமும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. முழு விசாரணைக்குப் பின்னரே அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார் அவர்.

குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தை மாநில டிஜிபி கே.ராமானுஜம் பார்வையிட்டார். குறைந்த சக்தியுள்ள குண்டுகளே வெடித்துள்ளன. சென்னையை குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதா அல்லது ரயில் காலதாமதமாக வந்துள்ளதை அடுத்து வேறு இலக்கு நோக்கி வைக்கப்பட்ட குண்டு சென்ட்ரலில் குண்டுவெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

தேர்தல் கண்காணிப்புப் பிரிவு டிஜிபியான அனூப் ஜெய்ஸ்வால், குண்டுவெடிப்பு குறித்து சில தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஊகத்தின் அடிப்படையில் இப்போது எதுவும் கூற இயலாது. இதுவரை இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றார்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக சிபிலிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்தச் சம்பவத்தால் தமிழக மக்கள் யாரும் பீதி அடையவேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்த தேசிய புலனாய்வுக்குழுவை அனுப்பவும், தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் தடயஅறிவியல் நிபுணர்களை அனுப்பவும் மத்திய உள்துறை அமைச்சகம் தயாராக இருந்ததாகவும், ஆனால், தமிழக அரசு, எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம், விசாரணையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டதாகவும் தில்லியிலிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புத் துறை கமிஷனர் (தென் பிராந்தியம்) எஸ்.கே.மித்தல் விசாரணை நடத்துவார் என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்úஸனா தெரிவித்தார்.

TAGS: