இந்தியாவில் நடக்கப் போகும் அரசியல் மாற்றம் பாகிஸ்தானை விட இலங்கைக்குத்தான் அதிகமான அச்சுறுத்தலாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாறு இந்திய தமிழகத்திலிருந்து வாரமிருமுறை வெளியாகும் ஜூனியர் விகடனில் வெளியாகும் மிஸ்டர் கழுகு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் வெளிவந்த இலங்கை பற்றிய குறிப்புகள் வருமாறு
குண்டு வெடிப்பு விவகாரத்தில் பாகிஸ்தான், இலங்கை, ஐ.எஸ்.ஐ. என்று அதிகம் பேசப்படுகிறதே?
இந்தியாவில் நடக்கும் தேர்தலை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இங்கு ஒருவேளை ஆட்சி மாற்றம் நடந்தால் அது இந்தியாவின் சிந்தனை மாறுதலை, முகத்தை மாற்றிவிடும் என்பதில் உலக நாடுகள் இப்போதே கவனமாக இருக்கின்றன.
‘அமைதியான, அனைத்துக்கும் தலையாட்டும் காங்கிரஸை இதுவரைக்கும் உலக நாடுகள் பார்த்தன. ஆனால், பி.ஜே.பி. அரசு, அதுவும் நரேந்திர மோடி அப்படி இருக்க மாட்டார்’ என்று அந்த நாடுகள் நினைக்கின்றன.
அமெரிக்காவுக்கும் மோடிக்குமான மோதல் இரண்டு ஆண்டுகளாக நடப்பதுதான். அவருக்கு பாஸ்போர்ட் தராமல் இழுத்தடித்ததில் ஆரம்பித்த விவகாரம் அது.
இப்போது பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு நாடுகளையும் மோடி விமர்சித்துப் பேசி வருகிறார்.
‘அருணாசலப் பிரதேசம் எங்களுக்கே முழுமையாகச் சொந்தம்’ என்று சொல்லி சீனாவையும், ‘இங்கு பலவீனமான மத்திய அரசு இருப்பதால்தான் அந்நிய ஊடுருவல் இருக்கிறது’ என்று பாகிஸ்தானையும், ‘இந்திய மீனவர்களைத் தாக்குவதை இலங்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மீனவன் கூட தாக்கப்பட மாட்டான்’ என்று இலங்கையையும் மோடி விமர்சித்து வருகிறார். இதனை அந்த நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் போது சீனாவும், பாகிஸ்தானும்தான் அந்த நாட்டுக்கு முழுமையான ஆயுத உதவியைச் செய்தது. இவை அனைத்தையும் கோத்துப் பார்த்தால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி, இலங்கை குடியுரிமை பெற்றவர் என்பதால்தான் இந்தப் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன.
சமீபத்தில், தாவூத் இப்ராஹிம் குறித்து மோடி சொன்ன கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் தாவூத் இப்ராஹிமை கண்டுபிடித்து இந்தியாவுக்கு கொண்டுவருவோம் என்று பேசினார். இதனை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் அலிகான் விடுத்துள்ள அறிக்கையில், பாகிஸ்தானுக்குப் பகைமை ஏற்படுத்தும் வகையில் எல்லை மீறி மோடி பேசி வருகிறார்.
மிரட்டல்கள் மூலமாக எங்களை அச்சுறுத்த முடியாது. மோடி இந்தியாவின் பிரதமர் ஆனால், பிராந்திய அமைதியைச் சீர்குலைத்து விடுவார் என்று சொல்லியிருக்கிறார்.
அந்தளவுக்கு அண்டை நாடுகள் பீதியில் உள்ளன. அதனால்தான் பன்னாட்டு சதிவலை இதில் பின்னப்பட்டு உள்ளது என்ற சந்தேகம் காவல்துறைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றம் பாகிஸ்தானைவிட இலங்கைக்குத்தான் அதிகமான அச்சுறுத்தலாகச் சொல்லப்படுகிறது.
இதுவரை இலங்கைக்கு முழுமையாக ஆதரவைத் தந்து வந்தது காங்கிரஸ் அரசு. இந்த ஒத்துழைப்புக் கிடைக்காமல் போனால் அவர்களுக்கும் சிரமம்.
அதனால் அவர்களும் இங்கே அரசியல் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து பல காரியங்களை நடத்திக் காட்டத் துடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது! என்றபடி அடுத்த விடயத்துக்குத் தாவினார் கழுகார்.
எதிர்வரும் 16-ம் தேதிக்குப் பிறகு பா.ஜ.க. தனிப் பெரும்பான்மைப் பெற்றோ அல்லது கூட்டணி கட்சிகளோடு சேர்ந்தோ மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதனால், இந்தியாவின் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கையில் பெரும் மாற்றம் வரப் போவதும் உறுதி. பாகிஸ்தானுடன் காங்கிரஸ் நடத்தி வந்த வழ-வழா, கொல-கொலா போக்கைத் துறந்து கடுமையான இராணுவப் போக்கு காணப் படும். மோடி தன்னை அவமதித்த அமெரிக்காவை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டு கை கோர்த்து செல்லப் போவதில்லை. அதனை அறிந்து முன்கூட்டியே அமெரிக்காவின் இந்திய தூதரை மாற்ற வேண்டிய நிலை வந்தது. இலங்கை காட்டி வந்த கண்ணா மூச்சி விளையாட்டு நிறுத்தப் பட்டு. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அது முகஸ்துதி பண்ணி வாலாட்டிக் கொண்டிருக்கும் நாடகம் வெட்டப் படும். இல்லையேல், இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவால் பிரச்சனை வரும். இறுதியாக இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் வடகிழக்கு எல்லையில் போர் மூளும் அபாயம் வெகுவாகவே உள்ளது. போர் மூளும் வேளையில், ஆசிய மற்றும் உலக பொருளாதாரமும் பாதிப்படையும். சமய ரீதியில் இந்துத்துவா கோட்பாடு மேலும் தீவீரம் அடைந்து இந்தியாவின் உள்நாட்டு மக்களிடையே ஒற்றுமை குலையும். இந்தியாவின் மத சார்பற்ற அரசியல் மாறி மத அரசியல் மேலும் வன்மை பெரும். பொருளாதாரம்? பொறுத்திருந்து பார்ப்போம்.