மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 18 பேர் பலி, 145 பேர் காயம்

maharastra_railaccident_001மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.

மும்பையில் இருந்து 120 கிலோ மீற்றர் தொலைவில், திவா – சஸ்வந்த்வாடி பயணிகள் ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.40 மணியளவில் நாகோதானே – ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே விபத்துக்குள்ளானது.

இதில், இன்ஜின் மற்றும் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

காயமடைந்த 145 பேருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில் விபத்து நிகழ்ந்தது போதிய அடிப்படை வசதிகள் இல்லாத உள்ளூர் பகுதி என்பதால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், கொங்கன் ரயில்வே அதிகாரிகளும், மருத்துவர்கள் குழுவும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வே துறை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

TAGS: