தேர்தல் வன்முறை புகார் தவறு எனில் என் மீது நடவடிக்கை எடுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு மோடி சவால்

“”தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. இவ்வாறு கூறுவதற்காக தேர்தல் ஆணையம் வேண்டுமானால் என் மீது வழக்கு தொடரட்டும்” என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.

மேலும், மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறைகள் மற்றும் கள்ள வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கத் தவறிவிட்டதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோவுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது தேர்தல் ஆணையம் குறித்து அவர் பேசியதாவது:

நீங்கள் (தேர்தல் ஆணையம்) ஏன் செயல்படவில்லை? உங்கள் உள்நோக்கம் என்ன? தற்போது நான் கூறுவது தவறு என்று நீங்கள் கருதினால், எனக்கெதிராக மற்றுமொரு வழக்கைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.

நடுநிலையான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்களுக்கெதிராக தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். வன்முறைகளையும், கள்ள வாக்களிப்பதையும் தடுக்கத் தவறிவிட்டீர்கள்.

எங்களது வேட்பாளர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமரை விட அதிகமான அதிகாரங்களை தேர்தல் ஆணையம் கொண்டுள்ளது.

தேர்தலில் எவ்வளவு கள்ள வாக்குகள் பதிவாகின என்று எனக்குத் தெரியும். இது இப்படியே தொடருமா?

உத்தரப் பிரதேசத்திலும் சில பகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் நடக்கும் என்று நான் கூறினேன். ஆனால், அதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மேற்கு வங்கம், பிகார், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல்களில் முறைகேடுகள் நடக்க உள்ளன.

மம்தா மீது தாக்கு: வங்கப் புலி (மம்தா) ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால், காகிதப் புலி என்று விமர்சிக்கப்படும் நான் ஆளும் குஜராத்திலோ பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

காகிதப் புலி ஆளும் குஜராத்தில் ஊழலுக்கு எதிராக இணையதளம் மூலம் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வங்கப் புலி ஏன் ஊழலில் திளைத்தது? காங்கிரஸýம், திரிணமூல் காங்கிரஸýம் நட்பு அரசியலில் ஈடுபட்டுள்ளன.

வாக்கு வங்கிக்கான அரசியலை தவிர்த்து, தங்களின் வளர்ச்சிக்கான அரசியலில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபட முஸ்லிம்கள் அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் புனித பயணத்துக்காக குஜராத்தில் 40,000 முஸ்லிம்கள் விண்ணப்பிக்கின்றனர்.

ஆனால், மேற்கு வங்கத்தில் 12,000 முஸ்லிம்களே விண்ணப்பிக்கின்றனர். குஜராத்தில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஆரம்பக் கல்வி பெறுகின்றனர். ஆனால் இங்கு 50 சதவிகித்துக்கும் குறைவான முஸ்லிம்களே ஆரம்பக் கல்வி பெறுகின்றனர்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்க முதல்வர் தனது பணியை செய்கிறாரா என்பதை பாஜக அரசு உறுதி செய்யும்.

மேற்கு வங்க மக்களுக்காக நான் பணியாற்றுவேன். பழிவாங்கும் அரசியலை விட மாற்றம் கொண்டு வரும் அரசியலிலேயே நம்பிக்கை கொண்டுள்ளேன். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மம்தா தனது நாடகத்தை நிறுத்திவிட்டு அரசை தீவிரமாக நடத்துவார்.

நான் 100 கி.மீ. சாலை அமைத்தால், அவர் 10 கி.மீ. சாலையாவது அமைப்பார். நான் 1 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுத்தால், அவர் 10,000 வீடுகளாவது கட்டிக் கொடுப்பார். இதனால் மேற்கு வங்க மக்கள் ஆதாயமடையலாம் என்று மோடி பேசினார்.

‘பிரதமர் பதவி: சோனியாவின் வாக்கு பலிக்கட்டும்’

பதோஹி, மே 4: “ஒரு பிரதமரைப் போலவே நான் செயல்படுவதாக, சோனியா காந்தி பேசிவருகிறார். “சிலர் சொன்னால் அதுபோலவே நிச்சயம் நடக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப அவரது வாக்கும் (பேச்சு) பலிக்கட்டும்’ என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மக்களவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்னைப் பற்றி பலவாறான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் சுமத்துகின்றனர். இப்போதே ஒரு பிரதமரை போன்று நான் செயல்படுவதாக  சோனியா காந்தி பேசி வருகிறார். “சிலர் சொன்னால் அதுபோலவே நிச்சயம் நடக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப அவரது வாக்கும் (பேச்சு) பலிக்கட்டும்.

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றால், குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பி.க்கள் மீதான விசாரணைகளை ஓராண்டுக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். வேட்பு மனு தாக்கலின்போது அவர்கள் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைத்து அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கத் தேவையான அனுமதியைக் கேட்டுப் பெறுவேன்.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் ஏராளமான முறைகேடுகளை தந்தை- மகன் கூட்டணி (சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும், அவரது மகன் முதல்வர் அகிலேஷ் யாதவும்) செய்துள்ளது. அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்துவதையே ஒரு சாதனையாக தேர்தல் ஆணையம் கருதுமானால் அது தவறு’ என்றார் நரேந்திர மோடி.

TAGS: