பழுதான கண்காணிப்புக் கேமராக்கள் : சென்ட்ரல் குண்டுவெடிப்பு குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிக்கல்

பெங்களூர்-சென்னை சென்ட்ரல் இடையிலான சில ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையிலும் பொருத்தப்பட்ட இடங்களில் அவை சரிவர வேலை செய்யாததாலும் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை (மே 1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திரத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண் என்ஜினீயர் உயிரிழந்தார். 14 பேர் பலத்த காயமடைந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 12 தனிப்படைகளை அமைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏ.டி.ஜி.பி. கரன்சின்ஹா மற்றும் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் முக்கியத் தடயங்களாக சிக்கியுள்ளன. குண்டு வெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரம் முன்பாக மர்மநபர் ஒருவர், குண்டு வெடித்த பெட்டிக்கு முந்தைய பெட்டியிலிருந்து பதற்றத்துடன் வேகமாக இறங்கி செல்லும் காட்சியை சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் அண்மையில் வெளியிட்டார்.

சென்னையில் பதிவான அந்த மர்ம நபரின் உருவம், பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவிலும் பதிவாகியிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த நபரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் பெங்களூருவில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லாததால் இரண்டு இடங்களிலும் பதிவாகியிருப்பது ஒரே நபர்தானா என்ற குழப்பம் எழுந்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே குண்டுகள் வெடித்த பெட்டிகளில் (எஸ் 4ல் இருக்கை எண்.70, எஸ் 5ல் இருக்கை எண்.28) 2 பேர் போலி முகவரி கொடுத்து தத்கல் டிக்கெட் எடுத்து பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

70-ம் எண் இருக்கை அகமது உசேன் என்பவரின் பெயரிலும், 28ம் எண் இருக்கை ஜான்சன் என்பவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் ரயில் நிலையத்தில் கடந்த 29 ஆம் தேதி அன்று, காலை 10.07 மணிக்கு தத்கலில் 2 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அகமது உசேன் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம், மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் குவாஹாட்டி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களை கொடுத்து தத்கல் டிக்கெட்டை எடுத்துள்ளனர்.

ஜான்சன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் தொலைபேசி எண் எதுவும் இல்லை.

அகமது உசேன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் செல்பேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை போலீஸார் ஆய்வு செய்தபோது கடந்த ஒரு மாதமாக அந்த செல்பேசி “சுவிட்ச் ஆப்’ செய்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே இவர்கள் 2 பேரும் குண்டு வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட பின்னர், எங்கு இறங்கினார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.

பெங்களூரிலிருந்து புறப்பட்ட குவாஹாட்டி ரயில், 6 ரயில் நிலையங்களைக் கடந்து சென்னை வந்துள்ளது. பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காரூப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய இடங்களில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. கேமராக்கள் பொருத்தப்பட்ட சில ரயில் நிலையங்களிலும் அவை சரிவர வேலை செய்யவில்லை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால், குண்டு வெடிப்பு குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக செயல்பட்டிருந்தால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்ளைக் கண்டுபிடிக்கத் தேவையான தெளிவான ஆதாரங்கள் கிடைத்திருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியது:-

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரிய ரயில் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே வேளையில் இடையில் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் கேமரா வசதி இல்லை. இதனால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

TAGS: