ராமரை குறிப்பிட்டுப் பேசியதால் சர்ச்சை: நரேந்திர மோடி பிரசாரம்

  • ஃபைசாபாதில் ராமர் உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து திங்கள்கிழமை உரையாற்றும் மோடி.
  • ஃபைசாபாதில் ராமர் உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து திங்கள்கிழமை உரையாற்றும் மோடி.

 “சொன்ன சொல்லைத் தவறாத ராமபிரான் அவதரித்த மண்ணில் வசிக்கும் மக்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய காங்கிரஸூக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ராமர் அவதரித்ததாகக் கருதப்படும் அயோத்தி அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசாபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஃபைசாபாதில் ராமர் உருவப்படத்துடன் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து உரையாற்றிய மோடி, தனது உரையில் பாஜகவின் லட்சியத் திட்டமான ராமர் கோவில் கட்டுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. எனினும் ராமரைக் குறிப்பிட்டு அவர் பேசியதும், மேடையின் பின்னணியில் ராமர் படம் இடம்பெற்றதும் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:

இது சத்தியசீலரான ராமர் அவதரித்த பூமியாகும். இங்குள்ள மக்கள் “ஒருவர் உயிரையே இழந்தாலும் சரி, கொடுத்த வாக்கை மீறக்கூடாது’ என்று நம்புகின்றனர். எனவே, 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் விட்டு விட்ட காங்கிரஸ் கட்சியை உங்களால் மன்னிக்க முடியுமா?

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 6 ஆண்டு கால ஆட்சியில் 6.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். குஜராத் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேசமும் ஏன் வளர்ச்சியடைய முடியாது?

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி புரியும் சமாஜவாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் லக்னௌவில் எதிரியாகவும், தில்லியில் நண்பர்களாகவும் செயல்படுகின்றன. இந்த இரு கட்சிகளும் தாய்-மகன் (சோனியா-ராகுல்) அரசைக் காப்பாற்றுகின்றன. காங்கிரஸ் கட்சியோ இந்தக் கட்சியின் தலைவர்களை சிபிஐயிடம் இருந்து காப்பாற்றுகிறது. குறிப்பாக முலாயம் சிங்கை சிபிஐ பிடியிலிருந்து அக்கட்சி காப்பாற்றுகிறது.

ராமர் அவதரித்த மண்ணில் வசிக்கும் மக்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸூக்கும் அதை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் ஊழலை எதிர்த்துப் போராடுவேன் என்று ராமரின் பூமியான இங்கிருந்து நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து அமைந்த சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் அரசுகள் தங்களுக்கு இடையிலான பகையைத் தீர்த்துக் கொள்வதில்தான் நேரத்தைச் செலவிட்டன.

தங்கள் பெற்றோருக்கு மருத்துவ வசதிகளையும் குழந்தைகளுக்கு நல்ல கல்வியையும் அளிப்பதற்குச் செலவழிப்பதை விட துப்பாக்கி வாங்குவதற்கே இங்குள்ள மக்கள் முக்கியத்துவம் அளிக்கும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது.

நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் நினைவைப் போற்ற காங்கிரஸ் தவறிவிட்டது. இந்த தாய்-மகன் அரசின் ஆட்சியில் வல்லபபாய் படேலின் பெயர் நாட்டில் எங்குமே இல்லை. நேரு குடும்பத்தின் பெயர்கள் சுமார் 5 ஆயிரம் அரசுத் திட்டங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள நிலையில் படேலின் பெயர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இதற்கு உரிய பதிலடி கொடுக்க நான் முடிவு செய்துள்ளேன். படேலுக்கு உலகிலேயே பெரிய சிலையை குஜராத்தில் அமைக்க நான் திட்டமிட்டுள்ளேன் என்றார் நரேந்திர மோடி.

மோடி பேசியபோது, பொதுக்கூட்டத்தில் இருந்து “ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷம் தொடர்ந்து எழுந்தது.

தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

அயோத்தி அமைந்துள்ள ஃபைசாபாதில் ராமர் பெயரை குறிப்பிட்டு மோடி பேசிய சில மணிநேரத்துக்குள், மதத்தின் பெயரால் மோடி வாக்குச் சேகரிப்பதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், பாஜக-வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவுச் செயலாளர் கே.சி. மித்தல் திங்கள்கிழமை புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “மோடியின் பிரசார மேடையில் ராமர் படம் இடம்பெற்றிருந்தது மதத்தின் பெயரால் வாக்காளர்களிடம் வாக்குச் சேகரிக்கும் உத்தியில் அமைந்திருந்தது. இது சட்டத்தையும் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மீறிய செயலாகும். ஆகையால் இது தொடர்பாக மோடி உள்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். மேலும் பாஜக-வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மோடி உரை குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் தேர்தல் ஆணையத்திடம் நேரிலும் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஃபைசாபாதில் மோடி பேசிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் குறித்த மோடியின் பேச்சு மற்றும் ராகுல் போட்டியிடும் அமேதியில் சர்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் ஆகியவை குறித்தும் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, மோடி உரை குறித்தும், பிரசார மேடையின் பின்னணியில் ராமர் படம் இடம்பெற்றிருந்தது குறித்தும் அறிக்கை அளிக்குமாறு ஃபைசாபாத் மாவட்ட ஆட்சியரை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தாம் அறிக்கை கோரியிருப்பதாக உத்தரப்பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா, பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.

TAGS: