2ஜி: பிரதமர் அனுமதி பெற்றே அலைக்கற்றை ஒதுக்கீடு: சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசா வாக்குமூலம் பதிவு

  • தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான  மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா.
    தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான  மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா.

“மத்திய அமைச்சர்கள், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருடன் விவாதித்து கடைசியில் பிரதமர் ஒப்புதல் பெற்றே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தேன்; அதில் எனது தனிப்பட்ட நலன் ஏதும் இல்லை’ என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வாக்குமூலம் பதிவு செய்தார்.

இதையொட்டி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் ஆ. ராசா திங்கள்கிழமை ஆஜரானார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி, சரத் குமார், சித்தார்த் பெஹுரா, சந்தோலியா, ஷாஹித் உஸ்மான் பால்வா உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதைத் தொடர்ந்து, வழக்கில் முதலாவதாக குற்றம்சாட்டப்பட்ட ராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் தொடர்பான தனது கருத்தையும், அவரது பதவிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் விரிவாக எடுத்துரைத்தார். நீதிமன்றம் அளித்திருந்த மொத்தம் 1,718 கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு “எனக்குத் தெரியாது’ என்று ராசா பதில் அளித்தார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடர்பான கேள்விக்கு, “திமுக உறுப்பினர் என்ற முறையில் கட்சித் தலைரையும் மற்ற உறுப்பினர்களையும் அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். அதுபோல்தான் கனிமொழியுடன் பழகினேன்’ என்றார் ராசா.

“தனிப்பட்ட லாபத்துக்காக செயல்படவில்லை’: ராசா தனது கருத்தை விளக்கியதும் சில கேள்விகளை அவரிடம் நீதிபதி சைனி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில்:

“என் கருத்துகளைத் தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆகையால், இங்கு என் வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறேன். மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் என்னை சிபிஐ, ஊடகங்கள் போன்றவை குற்றவாளியாகச் சித்திரித்தன. எனினும், எனது பதவிக் காலத்தில் தனிப்பட்ட லாப நோக்கத்துக்காக நான் செயல்படவில்லை. அரசின் கொள்கை அடிப்படையில் சட்டத்துக்கு கட்டுப்பட்டும், பொதுநல நோக்குடனும்தான் நான் செயல்பட்டேன்.

“பிரதமர் ஒப்புதல் பெற்றே ஒதுக்கீடு’: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நான் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தொலைபேசி கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. தொலைத்தொடர்பு எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. அலைக்கற்றை ஒதுக்கீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, மத்திய தொலைத்தொடர்புத் துறை யோசனைகளின்படி செயல்பட்டேன். கேபினட் அமைச்சர்களுடன் அவை தொடர்பாக விவாதித்தேன். சொலிசிட்டர் ஜெனரலிடமும் விவாதித்தேன். முறைப்படி பிரதமரிடமும் தெரிவித்து அவரது ஒப்புதலைப் பெற்றே அலைக்கற்றையை ஒதுக்க நடவடிக்கை எடுத்தேன். எனது செயல்பாடு பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவோ, வேறு குற்றத்தை இழைத்ததாகவோ கருதும் வகையில் அமையவில்லை’ என்றார் ராசா.

காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குமூலம் பதவு செய்யும் நடைமுறை பிற்பகல் 3.30 மணி வரை நீடித்தது. இடையிடையே சில கேள்விகளுக்கு வழக்குரைஞர் உதவியுடன் பதில் பெற்று வாக்குமூலம் பதிவு செய்ய நீதிபதி சைனி அனுமதி அளித்தார்.

முன்னதாக, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி, நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு நீதிமன்றம் அளித்துள்ள கேள்விப் பட்டியலை பெற்றுச் சென்றார்.

ராசாவைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா சில கேள்விகளுக்கான தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். ஆனால், நீதிமன்ற அலுவல் நேரம் முடிந்து விட்டதால் மீண்டும் செவ்வாய்க்கிழமை பெஹுராவின் வாக்குமூலம் பதிவு செய்யும் நடைமுறை  தொடரும் என்று நீதிபதி சைனி குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

அடுத்து வரும் நாள்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். வரும் 19-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறைகளை முடிக்க சிபிஐ நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

TAGS: