காங்கிரஸ் கோட்டையில் விழுந்தது ஓட்டை; சீமாந்திரா தேர்தலில் கட்சிக்கு கடும் நெருக்கடி

icpவிஜயவாடா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, காங்கிரசின் கோட்டையாக திகழ்ந்த, ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில், தற்போது, அந்த கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தெலுங்கானா மாநில அறிவிப்பால், அங்கு நடக்கவுள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ், படுதோல்வியை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் ஒன்றாக, ஆந்திரா திகழ்ந்தது. கடைசியாக நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 33 பேர், வெற்றி பெற்றனர். மத்தியில், இரண்டாவது முறையாக ஐ.மு., கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, ஆந்திர மாநிலம் முக்கிய காரணமாக விளங்கியது. ஆனால், ‘ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும்’ என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, காங்கிரசின் செல்வாக்கை, அதல பாதாளத்துக்கு தள்ளி விட்டது. ஆந்திராவில், தெலுங்கானா அல்லாத, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி, சீமாந்திரா என, அழைக்கப்படுகிறது. தெலுங்கானா அறிவிப்பால், இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், காங்கிரஸ் மீது, கடும் கோபத்தில் உள்ளனர். பல ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, சமீபத்தில், பா.ஜ.,வில் சேர்ந்தார். இதேபோல், முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி, தனியாக கட்சி துவக்கியுள்ளார். ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள், இவரின் கட்சிக்கு சென்று விட்டனர். இதனால், சீமாந்திராவில், காங்கிரஸ் கூடாரம் காலியாகி விட்டது. இந்நிலையில், சீமாந்திராவில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும், நாளை தேர்தல் நடக்கவுள்ளது.

இதில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கும், கடும் போட்டி நிலவுகிறது. கிரண்குமார் ரெட்டியும், தன் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இவர்களுக்கு இடையில் நடக்கும் போட்டியில், காங்கிரஸ் கட்சி, இருக்கும் இடமே தெரியவில்லை. பல தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, அந்த கட்சிக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சாம்பசிவ ராவ் கூறியதாவது:

சீமாந்திரா பகுதி, காங்கிரசின் கோட்டையாக விளங்கியது. முன்பெல்லாம், இந்திரா, ராஜிவ், சோனியா போன்ற தலைவர்கள் இங்கு வந்தால், இரண்டு லட்சம் மக்கள், அவர்களை பார்ப்பதற்காக காத்திருப்பர். ஆனால், சமீபத்தில், இந்துர்பூருக்கு ராகுல் வந்தபோது, சில ஆயிரம் பேர் தான், இருந்தனர். காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளதற்கு, இது, நல்ல உதாரணம். இந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் தான், காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.Click Here

TAGS: