சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும், மாநிலத் தாய்மொழி வழியில் மட்டுமே தொடக்க கல்விக்கான பாடத்திட்டத்தை பின்பற்றுவதை கட்டாயப்படுத்தும் கர்நாடக அரசின் உத்தரவை, இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவில் அனைத்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி வழியில் பயிற்றுவிப்பதை கட்டாயமாக்கி, கடந்த 1994ம் வருடம் பிறபிக்கப்பட்ட கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சிறுபான்மை மக்களின் கல்வி நிறுவனங்களிலும் பிராந்திய மொழியை கட்டாயப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும், அரசு பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் கூறியிருக்கிறது.
இந்த வழக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் 2013ம் ஆண்டில் இரண்டு நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மாநில அரசாங்கத்துக்கு இது தொடர்பான அதிகாரம் உள்ளதா என்பதை அரசியல் சாசன அமர்வு ஆராயும் என்று கூறியது.
அப்போது நடைபெற்ற விசாரணையில் இந்த விவகாரம் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமை தொடர்புடையது என்று சுட்டிக்காட்டியதோடு, இதனால் வரும் கால இளம் சந்ததியினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
இந்த வழக்கில் முன்பு அரசு மானியம் பெறாத 1800 தனியார் பள்ளிகளின் தரப்பில் வாதாடிய போது, இந்தியா போன்ற பல மொழிகள் பேசும் சமுதாய மக்கள் வாழும் நாட்டில் ஒரு மொழியை மட்டும் கட்டாயப்படுத்துவது தவறு என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு, வெற்றிகரமான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள பல மொழிகளை கற்றுக் கொள்ள தேவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கல்ல என்று கூறிய தமிழ்நாடு பொதுப்பள்ளிகளின் மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,சிறுபான்மை மக்களுக்கான கல்வி நிலையங்களில் பயிலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை இதனால் பாதிக்கப்படுகிறது என்றார்.
எந்த ஒரு மாணவனும், தனது தாய்மொழியிலேயே கல்வியை கற்க வேண்டும் என்பதுதான் சரியானது. இந்த வாய்ப்பு மறுக்கப்படும்போது, இந்திய அரசியல் சட்டத்தின் 14வது ஷரத்து மீறப்படுகிறது என்றார் அவர்.
சிறுபான்மைச் சமூகங்களுக்காக நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சிறுபான்மை சமூகத்தினர் மட்டும் படிப்பதில்லை, மற்ற சமூகத்தினரும் படிக்கின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். -BBC