கிரிமினல் வழக்குகளில் அதிகாரிகளிடம் விசாரணைக்கு அரசு அனுமதி தேவையில்லை

indiacorruptionகிரிமினல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், மத்திய புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் வழக்கு விசாரணைகளின் போது, அதில் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, இனி அரசாங்கத்திடம் அனுமதி கோரி காத்திருக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் மாநில அரசு பணியில் உள்ள அதற்கு சமமான அதிகாரிகளுக்கு வழங்கப்படாத சலுகையாக, மத்திய அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளிடம் மட்டும் விசாரணை மேற்கொள்ள இவ்வாறு அனுமதி பெற வேண்டும் எனக் கூறும் டில்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவு 6ஏ-வை நீக்கியும் அதன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறை தடங்கல் இல்லாமல் குற்ற வழக்குகளில் விசாரணையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கோரி, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடந்த 2008ம் வருடம் தாக்கல் செய்த மனு மற்றும் டில்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவு 6ஏ-க்கு எதிராக தொடுக்கப்பட்ட பொது நலன் மனு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடைபெற்ற வழக்கின் விசாரணையில் இந்த உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், முதுநிலை மற்றும் இளநிலை அதிகாரிகளை தரம் பிரித்து, பாரபட்சமாக விசாரணைக்கு உட்படுத்துவது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பதால் மட்டும், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள தடை விதிப்பது சரியான அணுகு முறையில்லை என்றும் அந்த அமர்வு கூறியுள்ளது. -BBC

TAGS: