மின்வெட்டுப் பிரச்னையால் நோயாளிகள் பலி: இதைவிட தமிழகத்தில் வேறு கொடுமை இருக்க வாய்ப்பில்லை: விஜயகாந்த்

vijayakanthசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின் தடையாலும், ஜெனரேட்டர் இயங்காததாலும் செயற்கை சுவாக கருவிகள் வேலை செய்யவில்லை.  இதனால் விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வந்த பத்திரிகையாளர் பொன்முருகன் பரிதாபமாக பலியானார். மேலும், மாங்காட் டைச்சேர்ந்த ரவீந்திரன் என்பவரும் பலியானார்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’தமிழகத்தில் நிலவி வரும் மின் பிரச்னை தொடர்பாக மக்களவைத் தேர்தலின்போதே கூறினேன். ஆனால் அதிமுக அரசு தேர்தலுக்காக மட்டும் தமிழகத்தில் மின் பிரச்னையே இல்லை என்பதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது சென்னையில் 4 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 8 முதல் 12 மணி நேரமும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

தொழில் நகரங்கள் முடங்கிப் போய் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். கோடையின் தாக்கத்தால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி அவதிப் படுகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் விவசாயத்துக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. குடிநீர் பஞ்சம் அதிகமாக நிலவுவ தால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல், உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இருள் சூழ்ந்துள்ள நேரத்தில் கொள்ளை அடிப்பதும், வழிப்பறி செய்வதும் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது.

மருத்துவமனைகளும், நோயாளிகளும்கூட இந்த மின்வெட்டில் இருந்து தப்பவில்லை. ஆயிரக்கணக் கானோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மின் தடையால் உயிர் பிழைக்கப் போராடியுள்ளனர். அதில் இரண்டு நோயாளிகள் உயிர் இழந்துள்ளனர்.

இந்த செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மின் தடையால் செயற்கை சுவாசக் கருவிகள் செயல்படவில்லை என்று தெரிகிறது. மேலும், மருத்துவமனையின் சவக்கிடங்குகளில் உடல்கள் கெட்டுப் போய், அதிலிருந்து துர்நாற்றம் ஏற்படும் அளவுக்கு மோசமான நிலை உள்ளது.

இந்த ஆட்சியில் நோயாளிகளின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவரின் உடலையும் பாதுகாக்க முடியவில்லை. இதைவிட தமிழகத்தில் வேறு கொடுமை இருக்க வாய்ப்பில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.

TAGS: