முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

mullaperiyar-dam-photoபுதுடெல்லி, மே. 7– முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக – கேரள அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2006–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு தவறியது. மேலும் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கேரள அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடையும் என்றும் விஷம பிரசாரம் செய்து வந்தது. இதுமட்டுமின்றி அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்று கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டது.

இந்த தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த குழுவினர் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.

அந்த அறிக்கையை ஏற்க கேரள அரசு மறுத்துவிட்டதுடன் புதிய குழுவை நியமிக்கவும்கோர்ட்டில் வலியுறுத்தியது. ஆனால் கேரள அரசின் இந்த வாதத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில் நீதிபதிகள் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும், அணை பலவீனமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதுமட்டுமன்றி கேரள அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி மட்டுமின்றி 5 மாவட்ட விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த தீர்ப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

முல்லைப்பெரியாறு தீர்ப்பு குறித்த கேரளா அரசின் கருத்து

முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது உடைத்து விட வேண்டும், என்பது கேரளா அரசின் திட்டமாகும். அந்த அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பாமல், அதை தகர்த்து விட்டு, புதிய அணை கட்டி, அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பியது.

ஆனால் கேரளாவின் நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று தன் தீர்ப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. இது கேரளா மாநில அரசியல் தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முழுமையாக தெரிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் முதல்–மந்திரி அச்சுதானந்தன் கூறுகையில், ‘‘சட்டசபையை கூட்டி இதில் உடனே முடிவு எடுக்க வேண்டும்’’ என்றார்.

கேரளாவின் சட்டம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருப்பது கேரள மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாகும். எனவே முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இனி கேரளாவால் சட்ட ரீதியாக எந்த முட்டுக்கட்டையும் ஏற்படுத்த இயலாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளிடம் இது பெரும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

TAGS: