தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்தது ஆகியவற்றின் வரிசையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழகத்துக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற இனிப்பான செய்தி என்னை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து கேரளம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் கடந்த 2002 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

அதிமுக ஆட்சியின்போது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 27-2-2006-ல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், மத்திய நீர்வளக் குழுமத்தினர் கூறியபடி அணையை பலப்படுத்திய பிறகு உச்சமட்ட நீரளவான 152 அடி வரை உயர்த்துவது குறித்து முடிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அவமதிக்கும் வகையில், கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்ப்பாதுகாப்பு சட்டத்தில் கேரள அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி முல்லைப் பெரியாறு அணையின் உச்சமட்ட நீர் அளவு 136 அடி என நிர்ணயம் செய்யப்பட்டது.

கேரள அரசின் இந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என உத்தரவிடக்கோரி 31-3-2006-ல் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு மனு தாக்கல் செய்தது.

திமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கேரள அரசின் சட்டத் திருத்தத்துக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி மதிப்பளித்தார். பின்னர், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன பிரிவுக்கு மாற்றப்பட்டது. புதிய அணை கட்ட வேண்டும் என மத்திய அரசிடம் கேரளம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டபோது, இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று அன்றைய முதல்வர் கருணாநிதி வாதிட்டார்.

பின்னர், மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது தெரிந்ததும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரைக் கண்டித்து மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என கருணாநிதி அறிவித்தார். ஆனால், தன் குடும்ப நலம் பாதிக்கப்படும் என அஞ்சி கேரள அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் என அறிவித்தார். கடைசியில் அந்தக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவு, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 நபர்களைக் கொண்ட அதிகாரம் படைத்த குழுவினை அமைக்குமாறு உத்தரவிட்டது. இந்தக் குழுவில் தமிழகம் இடம் பெறாது என கருணாநிதி அறிவித்தார்.

ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாவிட்டால் அது கேரளத்துக்கு சாதகமாகி விடும் என நான் (ஜெயலலிதா) அறிக்கை வெளியிட்டேன். அதனைத் தொடர்ந்து ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை திமுக அரசு நியமித்தது.

2011-ல் நான் 3-வது முறையாக முதல்வரானதும், இந்தப் பிரச்னை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். 15-12-2011-ல் நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும். 2006-ல் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திருத்த வேண்டும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, அணையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின்மீது திமுக அங்கம் வகித்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசனப் பிரிவு, கேரள அரசின் பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு திருத்தச் சட்டம், அரசியல் சாசனத்துக்கு முரணானது எனவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், இதற்கு கேரள அரசு குறுக்கீடு செய்யக் கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் தென் மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 

மறுஆய்வு மனு தாக்கல் செய்வோம்: உம்மன் சாண்டி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த புதன்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை கேரளத்தில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கேரள மக்களின் பாதுகாப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த விவகாரத்தில் கேரளத்தின் அனைத்துக் கட்சிகளின் கருத்தைக் கேட்ட பின்புதான் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை மாநில அரசு வாதாடியது. இந்த விவகாரத்தில் கேரள அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டம் விரைவில் கூட்டப்படும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டத்தில் இருந்து அனைவரும் விலகி இருக்க வேண்டும். கேரள மக்களின் பிரச்னை குறித்து மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை மாநில அரசு வியாழக்கிழமை அறிவிக்கும்’ என்று உம்மன் சாண்டி கூறினார்.

இதனிடையே, “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு துரதிருஷ்டவசமானது’ என்று எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, 35 லட்சம் கேரள மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்பதை உரிய முறையில் எடுத்துரைக்க கேரள அரசு தவறிவிட்டது’ என்றும் அச்சுதானந்தன் குற்றம்சாட்டினார்.

TAGS: