இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் புழல் சிறையில் அடைப்பு

zakheer-hussainசென்னையில் பதுங்கி இருந்த இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீசார் விசாரணைக்கு எடுத்து இன்றுடன் 3 நாட்கள் முடிவடைந்தது. இதனையடுத்து ஜாகீர் உசேன் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் கடந்த மாதம் 30–ந் தேதி கைது செய்யப்பட்டார். இவர் பிடிபட்ட மறுநாள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தது.

இது பற்றி விசாரணை நடத்துவதற்காக ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இன்றுடன் ஜாகீர் உசேன் காவல் முடிவடைந்தது.

இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 13வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவசுப்பிர மணியன் முன்பு ஜாகீர் உசேன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வருகிற 13–ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஜாகீர் உசேன் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

போலீஸ் காவலின் போது குண்டு வெடிப்பு தொடர்பாக ஜாகீர் உசேனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் அதுபற்றியெல்லாம் எனக்கு தெரியாது. உளவு பார்க்கவே நான் வந்தேன் என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே சென்னை வந்ததாகவும் இங்கு தீவிரவாதிகள் தங்குவதற்கு வீடுகள் பார்த்து வந்ததாகவும, ஜாகீர் உசேன் ஏற்கனவே கூறியிருந்தார்.

சென்னையில் அமெரிக்க தூதரகம், பெங்களூரில் இஸ்ரேல் தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினத்தில் கப்பல் படை தளங்கள் ஆகியவற்றை தகர்க்க அவர் திட்டமிட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக ஜாகீர் உசேனிடம் நூற்றுக் கணக்கான கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜாகீர் உசேன் பல தகவல்களை கூறியிருக்கிறார்.

ஜாகீரின் பின்னணியில் இயங்கியவர்கள் யார்? தூதரக அதிகாரிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பு? ஆகியவை குறித்து விரிவாக விசாரித்து வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது,

ஜாகீர் உசேன் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம் என்றார். ஜாகீர் உசேனிடம் இருந்த ஏராளமான தகவல்களை திரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவரிடம் 9 நாட்கள் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டனர்.

ஆனால் 3 நாட்கள் மட்டுமே அனுமதி கிடைத்தது. இதில் எதிர்பார்த்த அளவுக்கு அவரிடமிருந்து தகவல்களை பெற முடியவில்லை. இதனால் மீண்டும் ஒருமுறை ஜாகீர் உசேனை காவலில் எடுக்கவும் போலீசார் திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.

TAGS: