ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது உச்சகட்ட இனப்படுகொலை நடந்தேறிய மே18ம் நாளினை ஒர் கேளிக்கை நாளாக கொள்ளாமல் துக்க நாளாக கொண்டு, சென்னையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினை வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு தமிழகத்தில் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் உள்ள காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதோடு தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் , தலைமைச் செயலருக்கும் தமிழ் உணர்வாளர்கள் மனுக் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழக தமிழ் உணர்வாளர்கள்:
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மே 18ம் நாளில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்சிகளை நடத்துகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் சுடரேந்தி தமிழின உணர்வாளர்கள் போரில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளில் கேளிக்கை, விளையாட்டுகள், களியாட்டங்கள் முதலியவற்றை தவிர்த்து வருகின்றனர்.
தமிழகத்திலும் இனப்படுகொலை துக்க நாளை தமிழக மக்கள் நினைவு கூர்தல் அவசியமாகும். இந்த மே 18ம் நாள் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக பதிவாகி உள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்த நாளில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது தமிழர்களின் உணர்வை புண்படுத்துவதாக அமைந்துவிடும். கிரிக்கெட் வாரியம் தமிழர்களின் கோபத்திற்கும் ஆளாகும். அதனால் வருகிற மே 18ல் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்த அனுமதிக்கக் கூடாது.
மேலும், இந்த போட்டியை வேறு எதாவது ஒரு நாளில் ஐ.பி.எல் நிர்வாகம் வைத்துக் கொள்ளட்டும். ஒரு வேளை ஐ.பி.எல் நிர்வாகம் இதே நாளில் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் மாணவர்கள் இந்த கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தமிழக அரசும் இந்த நாளில் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்த அனுமதிக்க கூடாது என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (தமிழகம்) கேட்டுக் கொள்கிறது என்றார்.
ஒரு இனம் பெரும் துக்கத்தில் இருக்கும்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகேளிக்கை நடத்துவது தமிழர்களை எவ்வளவு துச்சமாக நினைக்கிறது இந்த துரோக இந்தியா.உம்மை பார்த்து காரி உமிழ தோனுகிறது.