முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை தேவை; வெற்று அறிக்கை வேண்டாம் : கருணாநிதி

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கால நேரத்தை விரயமாக்கும் வெற்று அறிக்கைகள் வேண்டாம் என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம் 7-5-2014 அன்று தீர்ப்பளித்த உடன், அதுகுறித்து செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து கருத்து கேட்டபோது, “முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது” என்று பதில் அளித்தேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனக்கே உரிய பாணியில் அபாண்டமான சில செய்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக அரசும், கேரள அரசும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித் தனியாக இரு மாநில உயர் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், 14.2.1998 அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அந்த மனுவின் மீதுதான் உச்சநீதி மன்றம் 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும், அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்றவுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் 2006 அன்று உத்தரவிட்டதை ஜெயலலிதா தன்னுடைய அறிக்கையில் முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல மறைத்து திசை திருப்பிட முயற்சித்திருக்கிறார்; பாவம்!

உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பினை நிறைவேற்றாமல், அதற்கு எதிராக 18-3-2006 அன்று கேரள அரசு, அதன் நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டம் – 2003க்கு திருத்தங்களைக் கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

அப்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில், உடனடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு அ.தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மாறாக, கேரள அரசு சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை காத்திருந்து, அதற்கு எதிராக தடையாணை கோரி ஜெயலலிதா அரசு 31-3-2006 அன்று – அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்து 32 நாட்களுக்குப் பிறகும்; கேரள அரசு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு 13 நாட்களுக்குப் பிறகும் – வழக்கு தொடுத்தது. ஜெயலலிதா அரசு இப்படி வழக்கு தொடுத்ததோடு சரி. உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை, சட்ட விதிமுறைகளை அனுசரித்து முறையாகப் பதிவு செய்து, அதற்கான பதிவெண்ணைப் பெறுவது; வழக்கை விசாரணைக்குக் கொண்டு வந்து தடையாணை பெறுவது போன்ற முயற்சி எதையும் மேற்கொள்வதற்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த வரையில் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேலைகளிலேயே தீவிரமாக இருந்தார். 2006 மே மாதம் தமிழகத்தில் தி.மு.கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகுதான்; அந்த வழக்கில் சட்ட ரீதியான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, வழக்கிற்கான ஆரம்பக் கட்டம் எனப்படும் பதிவெண்ணைப் பெற்று, 25-9-2006 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அந்த வழக்கின் நிறைவுக் கட்டமாகத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

25.9.2006 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் இரு மாநில அரசுகளும், மத்திய அரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி,  இப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியது. அதன்படி, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் முன்னிலையில் 29.11.2006 அன்று நானும் கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தனும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையில், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் வழங்கிய யோசனையின் அடிப்படையில், மீண்டும் கேரள அரசுடன் 19.12.2007 அன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவேதும் எட்டப்படவில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து நான், கேரள முதலமைச்சருக்கும், மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் பல கடிதங்கள் எழுதியதோடு, 18.12.2007அன்று பிரதமரை நேரில் சந்தித்தும் பேசினேன்.

மேலும் தி.மு.கழகம் ஆட்சியில் இருந்த காலத்திலும், இல்லாத நேரத்திலும் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறது.

இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடு தற்போது ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எந்தவிதமான நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை என்றும் கேரள அரசின் சட்டத் திருத்தத்திற்கு நான் மதிப்பளித்தேன் என்றும் கடைந்தெடுத்த பொய்யைச் சொல்லியிருக்கிறார். பெரியாறு, வைகை பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் புத்தி சிகாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேபி அணையைப் பலப்படுத்தினால், அணையின் நீர் மட்டத்தை, 152 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்தது. ஆனால் அதனை  செயல்படுத்தாமல் 17 நாட்கள் அ.தி.மு.க. அரசு காலந்தாழ்த்தியது. இதைப் பயன்படுத்தி கேரள சட்டமன்றத்தில் அணைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தனர். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, ஆய்வு, வாதம் என வழக்கு இழுத்தடிக்கப்பட்டு, இறுதியாக 2006இல் வழங்கிய அதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் மீண்டும் வழங்கியுள்ளது.

தாமதமாகக் கிடைத்த இந்த நீதிக்கு, பாராட்டு விழா நடத்துவது முக்கியமல்ல. தீர்ப்பு நகலைப் பெற்று, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு உடனே செயல்படுத்த வேண்டும். அணையில் 142 அடிக்குத் தண்ணீர் தேங்காத அளவுக்கு மதகுகள், 152 அடிக்கு மேல் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த மதகுகளை உடனே 136 அடிக்கு இறக்க வேண்டும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பெரியாறு – வைகை விவசாயிகளின் அவசர அவசியத்தையும்;

“அணையைப் பலப்படுத்துவதற்கு எஞ்சியுள்ள பணிகள் முடிவுற்றவுடன், படிப்படியாக 152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம்” என்று 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதையும்; ஆழ்ந்து கவனித்து அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான  முயற்சிகளை ஜெயலலிதா முனைப்போடு மேற்கொள்ள வேண்டுமேயல்லாமல், தேவையற்ற அறிக்கைகளை வெளியிட்டு, பயனற்ற முறையில் காலத்தைக் கடத்தி, நீண்டகாலமாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்குப் பாசன நீரையும், பொதுமக்களுக்கு குடிநீரையும் வழங்குவதைத் தாமதப்படுத்திவிடக் கூடாது என்றே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலே உள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

TAGS: