காங்கிரஸ் இடத்தில் நான் இருந்திருந்தால் மோடியை சிறைக்கு அனுப்பியிருப்பேன்

  • மேற்குவங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும், பாடகருமான இந்திரநீல் சென்னுடன், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி.
  • மேற்குவங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும், பாடகருமான இந்திரநீல் சென்னுடன், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி.

 “மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருந்திருந்தால் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் இடுப்பில் கயிற்றைக் கட்டி சிறைக்கு அனுப்பியிருப்பேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

மோடியை எதிர்க்க காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இல்லை. அதனால்தான், மோடிக்கு எதிராக அக்கட்சி கருத்து வெளியிடுவதில்லை. வெளியில், மோடியுடன் பகை உள்ளதைப் போலும், ஆனால் உள்ளே மோடியுடன் நட்புடனும் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ஊழலையும், பாஜக வன்முறையையும் ஆதரிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே, பாஜகவை காங்கிரஸ் கட்சி வலிமையுடன் எதிர்கொண்டிருந்தால் அக்கட்சிக்கு இதுபோன்ற தைரியம் வந்திருக்காது. பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தான் காரணம்.

குழந்தை பிறப்பதற்கு முன்பே, அக்குழந்தைக்கு திருமண தேதியை குறிப்பதைப்போல் மோடி இப்போதே பிரதமரானதைப்போல் செயல்படுகிறார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16ஆம் தேதிக்கு பிறகு மேற்கு வங்கத்தில் உள்ள வங்க தேசத்தைச் சேர்ந்த மக்களை வெளியேற்றுவதாக மோடி கூறுகிறார்.

வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு, மேற்கு வங்க மக்கள் உங்களை (மோடி) வெளியேற்றுவார்கள். நீங்கள்தான் பெட்டி படுக்கையுடன் தயாராக இருக்க வேண்டும்.

மோடி பிரதமரானாலும், மேற்கு வங்கத்தில் நீண்ட காலமாக இருக்கும் வங்க தேச மக்களை வெளியேற்ற உரிமை கிடையாது. இது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பதால் மத்திய அரசு அதில் தலையிட முடியாது என்று மம்தா பானர்ஜி கூறினார்.

TAGS: