முல்லைப் பெரியாறு பிரச்சனையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்: ஜெ.,

mullaperiyar-dam-photoஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்யாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு தற்போது அறிவுரை வழங்கியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித் தனியாக இரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவை யில் இருந்த நிலையில் 14.2.1998 அன்று தி.மு.க. ஆட்சியிலே தான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அந்த மனுவின் மீது தான் உச்ச நீதிமன்றம் 142 அடி வரை அணையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தமிழகத்திற்கு சாதகமாக 27.2.2006 அன்று தீர்ப்பளித்ததாக கூறி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட மனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தவிர, கருணாநிதி இதற்கென வேறு எந்த முனைப்பான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

உண்மை நிலை என்னவென்றால், கேரளாவைச் சார்ந்த ஒரு சில தனி நபர்களால் 1997 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்காலிகமாக குறைக்கப்பட்ட அளவான 136 அடிக்கு மேல் தமிழ்நாடு உயர்த்தக் கூடாது எனக் கோரி ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

jaya2இதற்கு மாறாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முன்பிருந்தபடியே முழு நீர் மட்ட அளவான 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு சில தனி நபர்கள் 1998 ஆம் ஆண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி மாற்றல் மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசும் ஒரு மாற்றல் மனுவை 1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஆனால், அதற்கு பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பின்னர், 2001 ஆம் ஆண்டு நான் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தான், முல்லைப் பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற 8.4.2002 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்ததன் அடிப்படையில் தான் 27.2.2006 அன்று தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது என்பதை கருணாநிதிக்கு நினைவூட்டவும், தெளிவுபடுத்தவும் விரும்புகிறேன். எனவே, “முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல” என்ற பழமொழி கருணாநிதிக்குத் தான் முழுமையாக பொருந்தும்.

27.2.2006 ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், கேரள அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வந்ததையடுத்து, முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று தமிழகத்தின் உரிமையினை நிலைநாட்டக் கூடிய, நியாயமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எனது தலைமையிலான அரசால் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த உடன், முல்லைப் பெரியாறு அணையைச் சார்ந்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அணையின் நீர்மட்டத்தினை உயர்த்துவதற்கான அனைத்து ஆரம்ப கட்டப் பணிகளை துவக்கி தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அணையின் நீர்மட்டம் 142 அடி என அணை மற்றும் உபரி நீர் வழிந்தோடிகளில் குறியீடுகள் செய்தும்;  மதகுகள் மற்றும் கதவணைகள் போன்றவற்றில் வண்ணம் பூசுதல்; கதவணைகளில் மசகு பூசுதல், பேபி அணையில் நடைபாதையை சீர்செய்தல் போன்ற ஆரம்ப கட்ட பணிகளை 8.5.2014 முதற்கொண்டே ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எனது உத்தரவின்படி, 8.5.2014 அன்றே உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள  மேற்பார்வைக் குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக, காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரான இரா. சுப்ரமணியனை நியமித்து ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழு உடனடியாக அதன் பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக, என்னுடைய உத்தரவின் பேரில், மத்திய நீர்வளக் குழுமம் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் மற்றும் கேரள அரசு அதன் பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 8.5.2014 அன்றே மத்திய நீர்ஆதார அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எனது தலைமையிலான அரசால் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.  அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே தான், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதியை உடனடியாக நியமித்ததுடன், மத்திய நீர்வள குழுமத்தின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் பிரதிநிதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மட்டும் தன்னிச்சையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, இது நன்கு தெரிந்திருந்தும், மக்களை குழப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசினுடைய கடிதத்தின் மீது தற்போதுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், 16.5.2014-க்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அந்த ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கும். அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, உடனடியாக மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அந்தக் குழுவால் எடுக்கப்படும்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சனைகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டு, தற்போது தனக்குத் தானே மனக் கோட்டைக் கட்டிக் கொண்டு, மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவரது கபட நாடகத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.  எனவே, தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான முல்லைப் பெரியாறு பிரச்சனையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்’’என்று கூறியுள்ளார்.

TAGS: