மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தினமும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் கூறி, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து வரைமுறை தாண்டிப் பேசுவதாக அக்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சகோதரியின் (மம்தா) மாற்றம் நல்லாட்சிக்காகவோ, வளர்ச்சிக்காகவோ அல்ல. அவரது மாற்றம் அராஜகத்துக்கானது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதற்கானது. சட்டவிரோத ஊடுருவல்களை ஊக்குவிப்பதற்கானது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவுக்கும், அவரது கட்சிக்கும் பாரம்பரிய எதிரி இடதுசாரிகள் என்பது ஊரறிந்த உண்மை. அக்கட்சிகள் தேர்தல் போட்டியில் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் இருக்கிறது. அந்த இடத்தை நெருங்கும் நிலையில் பாஜக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மம்தா ஏன் பாஜக தலைவர்களையே தாக்கிப் பேசுகிறார்?
பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை தினமும் ஒரு வார்த்தையைக் கூறி அவர் வரைமுறை தாண்டிப் பேசுகிறார். வளர்ச்சியின்மை காரணமாக மேற்கு வங்கத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் புத்திசாலி அரசியல்வாதியை (மம்தா) தனித்துவிட்டுவிட்டனர்.
தற்போது மோடி பிரதமராக அவர்கள் விரும்புகின்றனர். திரிணமூல் காங்கிரஸýக்கு இருக்கும் பாரம்பரிய ஆதரவாளர்கள் தவிர, இடதுசாரிகளில் இருந்த குண்டர்கள் தற்போது மம்தாவின் பக்கம் சேர்ந்துள்ளனர். மூன்றாவதாக வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களின் ஆதரவும் மம்தாவுக்கு உள்ளது.
இதன் காரணமாகவே ஊடுருவல்களை நியாயப்படுத்தும் மம்தா, மோடியைத் தூற்றுகிறார். இதை அவர் தொடர்ந்து செய்ய, அவரை அதிகாரத்தில் அமர்த்திய ஒரு குறிப்பிட்ட பிரிவில் இருந்து அவர் தனித்து விடப்படுவார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் வாக்குகளை எத்தனை காலம்தான் சகோதரி நம்பிக்கொண்டிருப்பார்? இந்த முறை அவர் அதிக தொகுதிகளை கைப்பற்றினாலும், சட்டப்பேரவை தேர்தலுக்கான எச்சரிக்கை அவருக்கு ஒலிக்கும் என்று அருண் ஜேட்லி கூறினார்.