ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு வலுக்கிறது : அலங்காநல்லூரில் கடையடைப்பு

jallyஅலங்காநல்லூர்: விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஜல்லிக்கட்டை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு இடங்களிலும் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டியினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் கடையடைப்பு போராட்டம் நடந்தது.நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு விழாக்கமிட்டியினர், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று காலை 9 மணிக்கு அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு காளைகளுடன் திரண்டனர். ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கொசவபட்டி கிராமத்தில் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக மாவட்டத்தில் கொசவப்பட்டி, புகையிலைப்பட்டி, தவசிமடை உள்ளிட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு அடுத்தபடியாக கொசவபட்டி ஜல்லிக்கட்டு பிரபலமானது.ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி கொசவபட்டி கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளும் அடைக்கப்பட்டன. இதுபோன்று பிள்ளமநாயக்கன்பட்டியிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

TAGS: