இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தோல்வி

fishing_talksஇலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்துள்ளது.

கரிட்டாஸ் இலங்கை-செடெக் நிறுவனத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் முரண்பட்ட நிலைமையே காணப்பட்டதால் பேச்சுவார்த்தை சுமார் 11 மணிநேரம் நீடித்தது.

இலங்கைக் கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பிரதிநிதிகள் இணங்க மறுத்துவிட்டனர்.

அதேபோல இந்திய மீனவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட ‘கடலின் தரையை துளாவி மீன்களை அள்ளிச்செல்லும்’ (பொட்டம் ட்ரோலிங்) முறை போன்ற மீன்பிடிமுறைகளை இந்திய மீனவர்கள் கைவிடவேண்டும் என்றும் இலங்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தமது பாரம்பரிய மீன்பிடி முறைகளையும் மீன்பிடிப் பிரதேசங்களையும் மாற்றிக்கொள்ள காலஅவகாசம் வேண்டும் என்று இந்திய மீனவர்கள் வலியுறுத்தியதாக தமிழ்நாடு கடலோர விசைப்படகு நல சங்கங்களின் ஆலோசகர் என் தேவதாஸ் தமிழோசையிடம் கூறினார்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்

 

ஆனால், சென்னையில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தைகளின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை மீறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத முறைகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘இந்திய மீனவர்கள் வரக்கூடாது’

அதனால், இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் தொழிலில் ஈடுபட அனுமதிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று இலங்கை மீனவர் பிரதிநிதிகள் விடாப்பிடியாக இருந்துள்ளனர்.

முப்பது ஆண்டுகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் கடல் வளங்களை இந்திய மீனவர்கள் சிதைத்துவருவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

ஆனால், பாரம்பரியமாக இருதரப்பு மீனவர்களும் தொழில்செய்துவந்த கடல் பிரப்பில் தமது தொழில் உரிமையை இலங்கை மறுக்கக்கூடாது என்று தமிழக மீனவர்கள் வாதிடுகின்றனர்.

நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்துவரும் இருதரப்பு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக சென்னையில் கடந்த ஜனவரி 27-ம் திகதி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி முடிந்துவிட்ட நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் எங்கு, எப்போது நடக்கும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.பி. அந்தோனிமுத்து பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். -BBC

TAGS: