இந்தியாவின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில், ஒப்பந்த ஊழியர்கள் என்ற பெயரில் நடக்கும் நவீன கொத்தடிமை முறை உட்பட பல்வேறு தொழிலாளர் உரிமை மறுப்புகளும் மனித உரிமை மீறல்களும் நடப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு எஃப் ஐ டி ஹெச் (Federation Internationale de Droits Human) என்ற மனித உரிமை தொண்டு நிறுவனம் ஆய்வொன்றில் கண்டறிந்துள்ளது.
தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள ஆடை உற்பத்தி தொழில்துறையைச் சேர்ந்த ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், ஆர்வலர்கள் போன்றோரிடம் நேர்காணல்களை நடத்தி ஆய்வு செய்து ‘Behind The Showroom: The Hidden Reality of India’s Garment Workers’ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் உரிமைகளை மறுக்கும் விதமான வேலை ஒப்பந்தங்கள், மோசமான வேலைச் சூழல் என்பன மிகவும் அதிகமாக காணப்படுவதாக எஃப் ஐ டி ஹெச் கண்டறிந்துள்ளது.
குறைந்த பட்ச ஊதியம் கூட பெற முடியாமல் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரமும் அதற்கு மேற்பட்டும் கட்டாயப்படுத்தி வேலைவாங்கப்படுகிறார்கள் என்று அவ்வமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.
சுமங்கலி வேலைவாய்ப்புத் திட்டம் என்ற சர்ச்சைக்குரிய திட்டம் இன்னும் கூட ஆங்காங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இளம் பெண்களின் திருமணத்துக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் கொத்தடிமைகளாக வேலைவாங்க இந்த சுமங்கலி வேலைவாய்ப்புத் திட்டம் வழிவகுத்திருந்தது.
வெளிநாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் வந்து பார்க்கும்போது, சகல உரிமைகளுடனும் வசதிகளுடனும் தொழிலாளர்கள் நல்ல விதமாக நடத்தப்படுவதாக இந்த தொழிற்சாலைகள் போலியாக காட்டிக்கொள்கின்றன என்று இந்த அறிக்கை விளக்குகிறது.
சர்வதேச ஆடை நிறுவனங்கள், தங்களுக்கு இருக்கின்ற செல்வாக்கை பயன்படுத்தி, தொழிலாளர்கள் உரிமைகள் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று எஃப் ஐ டி ஹெச் கோரிக்கை விடுத்துள்ளது.
தவிர இந்த நிலைமையை மாற்ற இந்திய அரசாங்கம் உரிய கொள்கை மாற்றங்களையும் நடவடிக்கைகளையும் கொண்டுவர வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டுள்ளது. -BBC