மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 280க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒன்பது கட்டமாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 543 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியும் சி வோட்டர் நிறுவனமும் மேற்கொண்ட வாக்குக்கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 289 தொகுதிகள் கிடைக்கும். இதன் மூலம் பெரும்பான்மைக்குத் தேவையான 272 தொகுதிகளை இந்தக் கூட்டணி பெறும் என்று தெரிகிறது.
பாஜகவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் 251 இடங்கள் கிடைக்கும். இது பாஜக இதுவரை பெற்றிராத அதிகபட்ச வெற்றியாக இருக்கும். அக்கட்சி கடந்த 1998 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் முறையே 181 மற்றும் 182 இடங்களைப் பிடித்திருந்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 101 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இக்கூட்டணி கைப்பற்றிய 262 இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை இம்முறை இழக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி இதற்கு முன் கடந்த 1999 மக்களவைத் தேர்தலில் பெற்ற 115 இடங்களே அக்கட்சிக்கு கிடைத்த மிகக்குறைந்த இடங்களாக இருந்தது.
இந்தியா டுடே-சிசரோ நிறுவனங்கள் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பு, பாஜக கூட்டணிக்கு 272 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 115 இடங்களையும், மற்ற கட்சிகள் 156 இடங்களையும் கைப்பற்றும் என்று இக்கணிப்பு கூறுகிறது.
சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் சிஎஸ்டிஎஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 270 முதல் 282 இடங்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 92-102 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம் என்று பார்க்கும்போது, பாஜக: 230-242, காங்கிரஸ்: 72-82, திரிணமூல் காங்கிரஸ்: 25-31, அதிமுக: 22-28, இடதுசாரிகள்: 14-20, சமாஜவாதி: 13-17, பிஜு ஜனதா தளம்: 12-16, தெலுங்கு தேசம்: 12-16, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்: 11-15, பகுஜன் சமாஜ்: 10-14, சிவசேனை: 10-14, தெலங்கானா ராஷ்டிர சமிதி: 8-12, ராஷ்ட்ரீய ஜனதா தளம்: 8-12, திமுக: 7-11 என்ற அளவில் வெற்றி கிடைக்கும் என்று சிஎன்என்-ஐபிஎன் வாக்குக்கணிப்பு கூறுகிறது.
மற்ற கணிப்புகள்: டைம்ஸ் நௌ தொலைக்காட்சிக்காக ஓஆர்ஜி நிறுவனம் நடத்திய வாக்குக்கணிப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 249 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 148 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 133 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதனிடையே, நியூஸ்24 தொலைக்காட்சி சார்பில் டுடே’ஸ் சாணக்யா நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 340 இடங்களும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 70 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 133 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஏபிபி நியூஸ்-நீல்சன் வாக்குக்கணிப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று கூறுகிறது. அந்தக் கூட்டணிக்கு 281 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 97, மற்ற கட்சிகள் 165 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக சுமார் 50 இடங்களைக் கைப்பற்றும் என்று பல்வேறு கணிப்புகளும் கூறுகின்றன.
அதேபோல், கர்நாடகத்தில் பாஜகவுக்கு 14 இடங்கள் கிடைக்கும் என்று பெங்களூருவில் இயங்கி வரும் “காப்ஸ்’ என்ற அமைப்பின் வாக்குக் கணிப்பில் தெரிய வந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸýக்கு 10 இடங்களும், ம.ஜ.த.வுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்று இந்தக் கணிப்பு தெரிவித்துள்ளது.
விவாதங்களில் பங்கேற்பில்லை – காங்கிரஸ்: இதனிடையே, மக்களவைத் தேர்தல் வாக்கு கணிப்பு முடிவுகள் தொடர்பாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக முன்னிலை:
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுக: 22 முதல் 28 வரையிலான இடங்களையும், திமுக 7 முதல் 11 இடங்களையும் வெல்லும் என்று சிஎன்என்-ஐபிஎன் கூறுகிறது.
சி-வோட்டர் நிறுவனத்தின் வாக்குக்கணிப்பின்படி தமிழக அரசியல் கட்சிகள் பெறக்கூடிய இடங்கள் வருமாறு:
அதிமுக 27
திமுக 6
பாஜக 2
தேமுதிக 1
மதிமுக 1
பாமக 1
புதுவை: என்ஆர் காங்கிரஸ் 1