பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால் தமிழகத்துக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
16-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என நரேந்திர மோடியும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் கூறியிருந்தனர். அதன்படி, பாஜக கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றுள்ள சிவசேனா (18), தெலுங்கு தேசம் (16), லோக் ஜனசக்தி (6), அகாலிதளம் (4), அப்னா தளம் (2) ஆகிய கட்சிகளுக்கு மட்டுமல்லாது தலா 1 இடங்களைப் பெற்றுள்ள பாமக, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
குறைந்த எண்ணிக்கையிலான கேபினட்டை அமைக்க மோடி விரும்புவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசம் (71), மத்தியப்பிரதேசம் (27), குஜராத் (26), ராஜஸ்தான் (25), மகாராஷ்டிரம் (23), பிகார் (22), கர்நாடகம் (17), ஜார்க்கண்ட் (12), சத்தீஸ்கர் (10), அசாம் (7), ஹரியாணா (7), தில்லி (7), உத்தரகண்ட் (5), ஹிமாச்சலபிரதேசம் (4) ஆகிய மாநிலங்களுக்கும், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கும் கேபினட் அமைச்சர் பதவி வழங்க வேண்டியிருப்பதால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இணை அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும் 39 தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலம் என்பதாலும், பாஜக சார்பில் வெற்றி பெற்ற பொன். ராதாகிருஷ்ணன், வாஜ்பாய் அரசில் இணை அமைச்சராக இருந்தவர் என்பதாலும் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பாஜக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பாமக சார்பில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் ஏற்கெனவே சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். ஆனாலும் இப்போது அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் திமுக, அதிமுக தயவுடன்தான் மத்தியில் ஆட்சி அமைந்தன. அதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அமைச்சரவையில் இடம்பெற்றனர். ஆனால், மத்தியில் ஆட்சி அமைவதில் தமிழகத்தின் பங்கு தேவை இல்லாததால் அமைச்சரவையிலும் வாய்ப்பு குறைவது குறிப்பிடத்தக்கது.