மு.க., ஸ்டாலின் விலக முடிவு ? ராஜினாமா கடிதம் கொடுத்தார்

stalin-karunanidhiசென்னை: தி.மு.க., வில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க., ஸ்டாலின் விலகியதாக கூறப்படுகிறது. தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி தலைவர் கருணாநிதியிடம் வழங்கியதாகவும், ஆனால் கட்சி தலைமை இதனை இது வரை ஏற்று கொண்டதாக உறுதியான தகவல் இல்லை.

சமீபத்திய லோக்சபா தேர்தலில் மோடி அலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநில கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது. இதன் எதிரொலியாக பல்வேறு அரசியல் கட்சிகள் இடையே முனகலும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இதன் முதற் கட்டமாக ஐக்கிய ஜனதாதள கட்சியை சேர்ந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது முதல்வர் பொறுப்பில் இருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பீகாரில் அடுத்த முதல்வரை யாரை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

அழகிரி சாடல் : இந்நிலையில் தமிழகத்தில் பெரும் தோல்வியை சந்தித்த தி.மு.க.,வில் ( ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை) சலசலப்பு எழுந்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து ஏற்கனவே தோல்வி குறித்து எச்சரித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (தற்போது தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்) தேர்தல் முடிவுகள் வந்த போதும் இந்த தோல்விக்கு காரணமானவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில் மு.க., ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்து கட்சி தோல்விக்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாக கூறி கட்சியில் வகிக்கும் பொருளாளர் பதவி மற்றும் இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதத்தை வழங்கினார். ஆனால் இந்நேரத்தில் அருகில் கட்சி பொதுசெயலர் அன்பழகன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை இருவரும் வாங்க மறுத்தனர். ஸ்டாலினுக்கு சமாதானம் சொல்லி அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கட்சி தலைமை எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை. இவரது ராஜினாமா முடிவால் தி.மு.க,. வில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

மோடியின் சுனாமி அலையில் இது போன்று பெரும் தோல்வியை சந்தித்த பல்வேறு மாநில கட்சிகளிலும் ராஜினாமா படலம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுப்பொறுப்பும் ஸ்டாலினிடமே : மு.க., ஸ்டாலினை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் முழுப்பொறுப்பு எடுத்து அனைத்து நடவடிக்கையையும் அவரே முடிவு செய்தார். கருணாநிதியின் செயல்பாடு மிக சொற்பமாகவே இருந்தது. கூட்டணியில் யாரை சேர்ப்பது, யாரை சேர்க்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின்தான் முடிவு எடுத்ததாக தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறாமல் தெரிவித்திருந்தனர்.

ராஜினாமா என்பது நாடகமே ! அழகிரி ; ஸ்டாலின் ராஜினாமா குறித்து மு.க.,அழகிரி தினமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில், இது போன்ற தகவலை நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. இவர் ராஜினாமா செய்வது போல் கடிதம் கொடுப்பார், ஆனால் ஜால்ராக்கள் சிலர் வேண்டாம் என தடுப்பார்கள். தலைவரும் ராஜினாமாவை ஏற்க முடியாது என்பார். பொறுத்திருந்து பாருங்கள், இது ஒரு நாடகம், கண்துடைப்பு . இவ்வாறு அழகிரி கூறினார்.

TAGS: