நாளை மறுதினம் பிரதமராக தேர்வு அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதில் நரேந்திர மோடிக்கு சிக்கல்?

athvaniபுதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ. கட்சி, நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால், அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. மூத்த தலைவர்களில் யார் யாருக்கு என்ன பதவி தருவது, கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா வேண்டாமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ. கூட்டணி 334 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ. மட்டும் தனித்து 282 இடங்களை பிடித்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் எண் 272ஐ விட அதிகமாக 10 இடங்கள் பா.ஜ.வுக்கு மட்டுமே உள்ளன. எனவே, கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகள் பா.ஜ.வுக்கு இப்போது இல்லை. அதனால் குறிப்பிட்ட சில  இலாகா வேண்டும் என்று யாரும் பா.ஜ.வை நிர்பந்திக்க முடியாது. ஆனால், கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை விட மோடி இளையவர். அவர் பிரதமர் பதவியேற்க உள்ளதால், மூத்த தலைவர்களில் யார் யாருக்கு என்னென்ன பதவி தரப் போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அத்வானிக்கு என்ன பதவி என்ற கேள்வி எழுந்துள்ளது. Ôஎன்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை ஏற்பேன்Õ என்று அத்வானி கூறியுள்ளார். அனேகமாக அவருக்கு துணை பிரதமர் பதவியும், உள்துறையும் வழங்கப்படலாம் என்று செய்தி வெளியானது. ஆனால், மோடி யின் கீழ் துணை பிரதமராக அத்வானியை நியமிப்பது சரியாக இருக்காது என்பதால், அவரை சபாநாயகராக ஆக்க பா.ஜ. மேலிடம் ஆலோசிப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன. மேலும், உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை ஆகிய முக்கிய 4 இலாக்காக்களில் ஒன்றை சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பார்க்கிறார். மற்றொரு தலைவர் அருண் ஜெட்லி அமிர்தசரஸ் தொகுதியில் தோல்வி அடைந்து விட்டார். அவர் வெற்றி பெற்றிருந்தால், நிதி அமைச்சராக வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. அவர் தோல்வி அடைந்ததால், மூத்த தலைவர், திறமையானவர், அனுபவசாலி என்ற முறையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம். ஆனால், Ôதேர்தலில் வெற்றி பெற்ற வர்களுக்கே பொறுப்புÕ என்று மோடி சில நாட்களுக்கு முன்னர் திட்டவட்டமாக கூறியிருந்தார். அதனால் அருண் ஜெட்லிக்கு என்ன பொறுப்பு கொடுப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.

தவிர மூத்த தலைவர்களில் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, ரவி சங்கர் பிரசாத், உமா பாரதி, நிதின் கட்கரி, அனந்த் குமார், வெங்கய்யா நாயுடு போன்றவர்கள் உள்ளனர். இவர்களுக்கு என்னென்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்தும் மோடி இதுவரை மவுனமாக இருக்கிறார். இதுபோல் பா.ஜ.வில் 2 டஜன் மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களில் பலர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் பணியாற்றியவர்கள். அவர்களை எல்லாம் திருப்திப்படுத்தும் வகையில் பொறுப்பு வழங்குவதில் மோடிக்கு சிக்கல் ஏற்படும். அதை எப்படி சமாளிக்க போகிறார் மோடி என்பதை அரசியல் கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவில் செல்வாக்குடன் உள்ள எடியூரப்பா தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் கேபினட்டில் இடம் கிடைக்கும். அதேபோல் பி.சி.கந்தூரி, கோபிநாத் முண்டே, மேனகா காந்தி ஆகியோருக்கும் முக்கிய இலாக்கா ஒதுக்கப்படலாம் என்று பா.ஜ. கட்சியினர் கூறுகின்றனர்.

மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.க்களில் சிலருக்கும் அமைச்சர் பதவியை வழங்க மோடி விரும்புகிறார். அதன்படி மூத்த தலைவர்கள், இளம் எம்.பி.க்கள் அடங்கிய அமைச்சரவையை மோடி உருவாக்குவார் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. திறமையான இளம் எம்.பி.க்களுக்கு போக்குவரத்து, ரயில்வே, தொழிற்துறை ஒதுக்கப்படும். தவிர இதுவரை கவனம் செலுத்தாமல் இருந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு, மூத்த  விஞ்ஞானிகளில் ஒருவரை நியமிக்க மோடி திட்டமிட்டுள்ளதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையில், நீண்ட காலமாக பா.ஜ. கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சிக்கு ஒன்று அல்லது 2 கேபினட் அமைச்சர் பதவியை மோடி வழங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் தருவார் என்று எதிர்பார்க்க முடியாது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுடன் கூட்டணி சேர்ந்து பீகாரில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் போட்டியிட்டார். அந்த கட்சி தலைவர்களும் ஆந்திராவில் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களும் கூறுகையில், Ôஇப்போதுள்ள சூழ்நிலையில், பா.ஜ.வுடன் பேரம் பேசும் அளவுக்கு கூட்டணி கட்சிகளுக்கு பலம் இல்லை. அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை ஏற்போம்Õ என்று கூறியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது மூத்த தலைவர்களுக்கு தொகுதி ஒதுக்குவதில் பா.ஜ.வுக்கு சிக்கல் ஏற்பட்டது. மூத்த தலைவர் அத்வானிக்கு குஜராத்தில் காந்திநகர் தொகுதியை ஒதுக்கியதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதேபோல் ராஜஸ்தானில் பார்மர் தொகுதி ஒதுக்கவில்லை என்று கூறி, மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து வெளியேறி, சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் இப்போது கேபினட் அமைச்சர்களை தேர்வு செய்வதில் ஏற்பட கூடாது என்பதில் மோடி மிக கவனமாக இருப்பதாக கூறுகின்றனர். எனினும், அமைச்சர்களை தேர்வு செய்வது மோடிக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம்பெறலாம். இந்த முறை கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்கினால், அது Ôஜம்போ அமைச்சரவைÕயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: