சோனியா, ராகுல் ராஜினாமாக்களை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்க மறுத்துள்ளது

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக  சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர்.தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர்.

 

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆஸ்கர் ஃபெர்னாண்டெஸ் தெரிவித்தார்.

அத்துடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையில் செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை பணிவுடன் ஏற்றுகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுவரும் ஆழமான மாற்றங்களை கவனிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதாகவும், வாக்காளர்களின் ஆதரவை பெற ஏன் காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்பதை உள்ளாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் அயராத தன்னலமற்ற கடும் உழைப்பை மீறியும் இந்த தேர்தலின் முடிவுகள் வருத்தத்தையே தருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் இந்த தீர்மானம் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ஜனார்தன் நிவேதி கட்சியின் எல்லா மட்டத்திலும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

கண்ணியமிக்க வகையிலும் நிதானத்துடனும் அரசாங்கத்தை நடத்தி வந்தமைக்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம் நன்றி தெரிவிப்பதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியமைக்கும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர்கட்சியாக இருந்தாலும் சரி ஜனநாயகம், மதச்சார்பின்மை, உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளை பாதுகாக்க காங்கிரஸ் பாடுபடும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -BBC

TAGS: