தமிழகத்தில் உள்ள 17 நதிகளையும் இணைக்க வேண்டும்: ராம.கோபாலன் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள 17 நதிகளையும் பொதுமக்கள் பங்களிப்புடன் இணைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராம.கோபாலன் வலியுறுத்தினார்.

பொள்ளாச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே வாக்கு வங்கி அரசியல் நடத்தி வருகின்றன.

இதற்காக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக அவை செயல்பட்டு வருகின்றன. இந்துக்களை கண்டுகொள்வதில்லை. இந்துக்கள் கொடுக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை.

ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் கொலை வழக்கில் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் பற்றி புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

தற்போது நரேந்திர மோடி பிரதமராக வரவிருப்பது மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. வல்லபபாய் படேலுக்கு பிறகு இரும்பு மனிதராக மோடி திகழ்ந்து வருகிறார்.

இந்தியாவில், ஒரு பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பும், மற்றொரு பகுதியில் வறட்சியால் பாதிப்பும் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையை மாற்ற நதிநீர் இணைப்பை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 17 நதிகளையும் முதலில் பொதுமக்கள் பங்களிப்புடன் இணைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள கோவில் பூசாரிகள், பணியாளர்களுக்கு சம்பளத்தை அரசு உயர்த்த வேண்டும். பெரும்பாலான கோவில்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

கோவில்களில் உள்ள நகைகள் பற்றி ஆய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பாதுகாப்புப் பணிக்கு நியமிக்க வேண்டும்.

மேலும், மடாதிபதிகள், இந்துக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும் என்றார்.

TAGS: