திப்பு சுல்தானின் ” ராமர்” மோதிரம்- 1.4 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம்

திப்பு சுல்தானின் மோதிரம்

 

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்ட , மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் அணிந்திருந்ததாகக் கூறப்படும் தங்க மோதிரம் ஒன்று பிரிட்டனில் சுமார் 1.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

இந்துக் கடவுளான ,ராமரின் பெயர், தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்த இந்த மோதிரம் 41.2 கிராம் ( சுமார் ஐந்து பவுன்) எடையுள்ளது.

இந்த மோதிரத்தை திப்பு சுல்தான் தனது விரலில் அணிந்திருந்ததாக பாரம்பர்யமாக வரும் செய்திகள் கூறுகின்றன.

லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் இன்று வியாழக்கிழமை நடத்திய ஏலத்தில், இந்த மோதிரத்தை 140,500 பவுண்டுகளுக்கு ( சுமார் 1.40 கோடி இந்திய ருபாய்கள் ) யாரோ ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். இது 10,000 பவுண்டுகளிலிருந்து சுமார் 15,000 பவுண்டுகள்தான் மதிப்புள்ளதாக கணிக்கப்பட்டிருந்த்து.

ஏலம் எடுத்தவர் யாரென்பதை இந்த நிறுவனம் வெளியிடவில்லை.

முஸ்லீம் சுல்தானாக இருந்தாலும், இந்து மதத்தின் மீது திப்பு வைத்திருந்த நன்மதிப்பின் வெளிப்பாடாக சிலரால் பார்க்கப்படும் இந்த மோதிரத்தை ஏலத்தில் விற்க இந்திய அரசும், கர்நாடக அரசும் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்தன.

ஆனால் இந்திய அரசு இந்த ஏலத்தில் பங்கேற்றதா என்பது தெரியவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த திப்பு, மைசூரை ஆண்ட ஹைதர் அலியின் வாரிசு.

ஹைதர் அலி 1782ல் இறந்த பின்னர் மைசூர் சுல்தானாக முடிசூடிய திப்பு, பெரும்பான்மை இந்துப் பிரஜைகளின் சுல்தானாக ஆட்சி புரிந்தார்.

சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்த திப்பு கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளுடன் 1780லிருந்தே மோதத் தொடங்கினார். இந்த மோதல்கள் 1799ல் சீரங்கப்பட்டினத்தில் நடந்த இறுதிப்போரில் , ஆர்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான படைகளின் வெற்றியில் முடிந்தன.

இந்தப் போரில் கொல்லப்பட்ட திப்பு சுல்தானின் கையிலிருந்து ,இந்த மோதிரம் ஆர்தர் வெல்லெஸ்லியால் எடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் வழி வந்த செய்திகள் கூறுகின்றன என்றாலும், ஒரு பெரிய முஸ்லீம் போர்வீரர் , இந்து கடவுளின் பெயர் பொறித்த மோதிரத்தை அணிந்திருக்கக் கூடும் என்பது வியப்பளிக்கும் செய்தியாகவே இருக்கும் என்று கிறிஸ்டீஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த மோதிரம் திப்புவின் களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது சாத்தியமே என்று அது கூறுகிறது. -BBC

TAGS: