தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது பாஜக

bjp-flag-_newபாஜக மூத்த தலைவர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கைகளை பாஜக நேற்று வியாழக்கிழமை நிராகரித்து விட்டது.

இது குறித்து டில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசுகையில்,

மோடி பிரதமராக பதவியேற்க உள்ள விழா, ஜனநாயகத்தின் மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக நடைபெறுகிறது.

அந்த விழாவில் பங்கேற்பதற்காகதான் அண்டை நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதுவொரு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியாகும். அண்டை நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்த வேண்டுமென்றதற்காக அந்நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், அவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த அடிப்படையில்தான் ராஜபக்சவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இதை தமிழக கட்சிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில்,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அண்டை நாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை கடைப்பிடித்து வந்தார். அதை தற்போது மோடி பின்பற்றுகிறார் என்று தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில்,

நாட்டின் நலன் கருதி அண்டை நாடுகளின் நல்லுறவை இந்தியா வளர்த்து வருகிறது. அதனால்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை

TAGS: