ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

vaikoமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஒரு சன்னியாசியாகவே வாழ்ந்து, கோடானு கோடி இந்திய மக்களின் நல்ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் பிரமிப்பு ஊட்டும் மாபெரும் வெற்றியை பெற்ற நரேந்திர மோடி  இந்திய நாட்டின் ஜனநாயகப் பெருமையை உலகம் வியக்க உயர்த்தி உன்னதமான புகழ்ச் சிகரங்களை நோக்கி இந்திய நாட்டை வழி நடத்துவார் என்ற திடமான நம்பிக்கையோடு அவரது பதவி ஏற்புக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

வரலாற்றில் சில சம்பவங்கள் விசித்திரமாக திரும்பத் திரும்ப நடைபெறுவதால்தான் வரலாறு மீண்டும் திரும்புகிறது என்ற சொற்றொடர் உலவுகிறது.

இதேபோல ஒரு 26 ஆம் தேதி 1950 ஜனவரி மாதம் மலர்ந்தது. அதுவே இந்தியாவின் குடியரசுத் திருநாள் ஆயிற்று. 1947 ஆகÞட் 15 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது விதியோடு நாம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று பண்டித ஜவஹர்லால் நேரு உணர்ச்சிகரமாகப் பேசினார். அந்த சுதந்திர தினம் தமிழர்களுக்குத் துக்க நாள் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அறிவித்தார். ஆனால், அவரது தலைமை மாணாக்கராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆகÞட் 15 துக்க நாள் அல்ல, கொண்டாட வேண்டிய மகிழ்ச்சிகரமான திருநாள் என்று தந்தை பெரியாரின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்டு பிரகடனம் செய்தார்.

அதே அறிஞர் அண்ணா அவர்கள் 1965 ஜனவரி 26 ஆம் நாளை துக்க நாள் என்று அறிவித்தார். பல்வேறு தேசிய இனங்கள், தேசிய மொழிகள், வேறுபட்ட கலாச்சாரங்கள் இவைகளைக் கொண்ட இந்திய உபகண்டத்தில் இந்தி மொழியை மட்டும் இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்கிவிட்டு, இந்தியப் பிரஜைகளான ஆங்கிலோ இந்தியர்களின் தாய்மொழியும், வடகிழக்கு எல்லைப்புற மாகாணங்களின் ஆட்சி மொழியுமான ஆங்கில மொழியை நிரந்தரமாக இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியில் இருந்து நீக்கிவிடவுமான முடிவினை 1965 ஜனவரி 26 அரசியல் சட்ட உத்தரவாதத்தோடு செயல்படுத்தும் நாளாக அமைந்துவிட்டதால், அந்த நாள் இந்தி பேசாத மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு துக்க தினமாகும். எனவே, 1965 ஜனவரி 26 ஆம் நாளை கருப்பு நாளாக துக்க தினமாக கடைப்பிடிப்போம். அனைத்துத் தமிழர்கள் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றுவோம் என்ற அறப்போரை அறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள்.

இலட்சக்கணக்கான மாணவர்கள் அண்ணாவின் அழைப்பை ஏற்று அறப்போர் நடத்தினர். 8 தமிழர்கள் தீக்குளித்து மடிந்தனர். ஜனவரி 26 ஆம் தேதி தமிழ்நாட்டின் வீதிகளில், தமிழர்களின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த அறப்போர்க்களத்தில் ஒரு மாணவனாக சிப்பாயாக நின்றவன் நான்.

இன்று ஏறத்தாழ அதே மனநிலையில் இருக்கிறேன். அறிஞர் அண்ணா இந்தியக் குடியரசை எதிர்க்கவில்லை. குறிப்பிட்ட 1965 ஜனவரி 26 ஆம் நாள் பண்டித நேரு இந்தி பேசாத மக்களுக்குத் தந்த வாக்குறுதியையும் மீறி, இந்தியை மட்டும் அரியணை ஏற்றுகின்ற தொடக்க நாளாக அமைந்ததால், தங்களது எதிர்ப்பையும், கசப்பையும் காட்டுவதற்காக கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார்.

அதே போலத்தான் நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த கொடிய பாவி இராஜபக்சே, புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன். எங்கள் மனவேதனையையும் எதிர்ப்பையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை ஆகும் என்பதால், இராஜ பக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, நாளை மறுநாள் மே 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம்.

என்றைக்கு இந்தியாவுக்குள் இராஜபக்சே நுழைந்தாலும் அக்கொடியவன் வருகையை எதிர்த்து நாங்கள் அறப்போர் நடத்துவோம் என்று மத்தியப் பிரதேசத்தில் சாஞ்சியை நோக்கி புறப்பட்ட முற்றுகைப் போராட்டத்தின் போது நான் அறிவித்தேன்.

அதன்பின்னர், தலைநகர் டெல்லிக்கு வந்து இந்தியப் பிரதமரை இராஜபக்சே சந்திக்கப் போவதாக அறிவிப்பு வந்தவுடன் நானும் என் சகாக்களும் டெல்லியில் அதே ஜந்தர் மந்தரில் இராஜ பக்சே வருகையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டோம்.

பீகார் பயணத்தை மட்டும் முடித்துக்கொண்டு கடைசி நேரத்தில் தனது டெல்லி வருகையை இரத்து செய்துவிட்டு, திருப்பதிக்கு ஓடிப்போனான் ராஜபக்சே. அங்கும் எங்கள் தோழர்களும், உணர்வாளர்களும் அறப்போர் நடத்திக் கைதானார்கள்.

தமிழ் இனப்படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய குற்றவாளியை இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கச் செய்வது அந்த விழாவின் உன்னதத்தையே அடியோடு நாசப்படுத்தி களங்கப்படுத்துவது ஆகும்.

இலங்கைத் தீவில் வெறிபிடித்த புத்த பிட்சுகள் சுவாமி விவேகானந்தர் அவர்களையே கற்களையும் செருப்புக்களையும் வீசித் தாக்கினார்கள். இதுவரை இலங்கையில் இந்துக் கோவில்கள் சிவன் கோவில், காளி கோவில், முருகன் கோவில் உள்ளிட்ட 2,300 ஆலயங்கள் சிங்கள வெறியர்களால் தாக்கி தகர்க்கப்பட்டன; கிறித்துவ தேவாலயங்கள் தாக்கப்பட்டன; கடைசியாக இப்பொழுது இÞலாமிய மசூதிகள் மீதும் தாக்குதல் நடக்கிறது. இந்துக் கோவில்களின் வளாகங்களில் புத்தர் சிலைகளை நிறுவி பௌத்த விகாரைகளைக் கட்டுகிறார்கள்.

ஈழத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கட்டாயச் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. இப்பொழுதும் சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக நடக்கின்றன.

தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவம் முகாம்கள் அமைத்து ஹிட்லர் வதை முகாம்களைப் போல, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகள் அச்சத்தையும் பீதியையும் தருகிற சிறைமுகாம்களாக ஆக்கப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழ்ப் பெண்கள் நாள்தோறும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். தமிழர்களின் கலாச்சார சுவடே இல்லாமல் ஆக்க கலாச்சாரப் படுகொலையும் கட்டமைப்பு படுகொலையும் இராஜ பக்சே அரசால் நடத்தப்படுகின்றன.

பச்சிளம் குழந்தைகள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு மாவீர மகன் பாலச்சந்திரன் படுகொலையே சாட்சியமாகும். தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தால் நாசமாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு இசைப்பிரியா படுகொலையே சாட்சியமாகும்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை கவுன்சிலில் ஜனநாயக நாடுகள் பலவும் சேர்ந்து சிங்கள அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. இனக்கொலை கூட்டுக் குற்றவாளியான சோனியா காந்தி இயக்கிய இந்திய அரசு ஜெனீவா கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தன் துரோகத்தைத் தொடர்ந்தது.

இந்தத் துரோகச் செயல்கள் அரங்கேற சிங்கள அரசுக்கும், சோனியா காந்திக்கும் கைக்கூலிகளாக செயல்பட்ட ஒரு சில அதிகாரிகள் இப்பொழுதும் அதே துரோகத்தைத் தொடர்வதற்கு நரித் தந்திரமாக செயல்படுகிறார்கள்.

புதிய அரசுக்கு மிகத் தவறான பாதையைக் காட்டி உள்ளார்கள். இந்தச் சதிச் செயலுக்குப் பின்னால், யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், யாரையெல்லாம் இராஜ பக்சே பயன்படுத்துகிறான் என்பதை நான் நன்றாக அறிவேன்.

தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு இராஜ பக்சே புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது தமிழர் நெஞ்சத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.

முத்துக்குமார் உள்ளிட்ட 19 உத்தமத் தியாகிகள் மேனியைக் கருக்கிய நெருப்பு எங்கள் நெஞ்சத்தில் அணையாத தணலாக ஏற்கனவே இருக்கிறது.

தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகம் எல்லாம் வாழும் தமிழர்களும் ஈழத்தைச் சூழ்ந்துவிட்ட மரண இருள் எப்பொழுது நீங்கும்? என்று பிறக்கும் நீதியின் விடியல்? என்று ஏங்குகின்றனர். இந்தியாவில் நரேந்திர மோடி அரசு பொறுப்பு ஏற்றால், நீதியின் கதவுகள் திறக்கும்; நிரந்தர வெளிச்சத்துக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பஞ்சமா பாதகம் செய்த இராஜ பக்சே இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியது எங்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும் என்பதால், மே 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழியில் எங்கள் கருப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதே நாளில், மே 26 திங்கட்கிழமை காலை 11 மணி அளவில், தலைநகர் சென்னையில் வடசென்னை துறைமுகம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும். கழகத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

TAGS: