பாரம்பரியக் கலையைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் புவிசார் குறியீடு தஞ்சாவூர் வீணைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வீணை இசைக் கருவி பண்டைய காலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும், தஞ்சாவூரில் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னர் காலத்தில்தான் தற்போதைய உருவத்தை அடைந்தது. எனவே, இதற்கு “தஞ்சாவூர் வீணை’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
பண்ருட்டியிலிருந்து வரவழைக்கப்படும் பலா மரத்திலிருந்து இந்த வீணைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாக இருக்கும்.
மைசூர் வீணை, திருவனந்தபுரம் வீணை போன்றவை இருந்தாலும், அவற்றைவிட தனிச் சிறப்பு கொண்டது தஞ்சாவூர் வீணை. அனைத்து ராகங்களையும் மீட்டக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்ட வீணை இது. எனவே, இந்த வீணை உலக அளவில் பிரசித்தி பெற்றது. தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு அண்மையில் கிடைத்தது. இந்த புவிசார் குடியீட்டுச் சான்றிதழை வீணைத் தொழிலாளர்களுக்கு வழங்கும் விழா தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வழக்குரைஞருமான பி. சஞ்சய் காந்தி கலந்து கொண்டு தஞ்சாவூர் வீணை தொழிலாளர்கள் குடிசைத் தொழில் நல முன்னேற்றச் சங்கம், தஞ்சாவூர் இசைக் கருவிகள் செய்வோர் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்துக்கு புவிசார் குடியீட்டுச் சான்றிதழை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் சஞ்சய் காந்தி கூறியது:
இந்த புவிசார் குறியீடு மூலம் தஞ்சாவூர் வீணைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. புவிசார் குறியீட்டுச் சட்டத்தில் தஞ்சாவூர் வீணை பதிவு செய்யப்பட்டுள்ளதால், இனிமேல் இதுபோன்ற வடிவில் வேறெங்கும் செய்யக் கூடாது. இது, வரலாற்றில் ஒரு மைல் கல். இதன்மூலம், வீணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 100 கலைஞர்கள் பயனடைவர். மேலும், தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த வருங்காலத் தலைமுறையினரும் இந்தத் தொழிலில் தொடருவதற்குப் புவிசார் குறியீடு வழிவகுக்கும்.
இதேபோல, தஞ்சாவூரில் பாரம்பரியமிக்க கைத்தறி, கைவினை கலைகளை மீட்டெடுத்து, தஞ்சாவூருக்கு மீண்டும் பெருமை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்
. இதன்படி, திருபுவனம் பட்டு, நெல் மாலை ஆகியவற்றுக்குப் புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைத்துவிடும்.
மேலும், சீரகச் சம்பா, மரக்குதிரை, திருவையாறு அசோகா அல்வா, கும்பகோணம் வெற்றிலை ஆகியவற்றுக்கும் புவிசார் குறியீடு பெற பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சஞ்சய்காந்தி.விழாவில் பலர் கலந்து கொண்டனர்.