பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி பதவியேற்பு விழாவில், அழைப்பு விடுக்கப்பட்ட “சார்க்’ கூட்டமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்கின்றன.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நவாஸ் ஷெரீஃப் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வருகிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு நல்லுறவு குறித்த ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு நாட்டுத் பிரதமர்களின் சந்திப்பு சர்வதேச நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக அதீத பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
மோடியின் பதவியேற்பு விழா 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பு வாயிலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான “சார்க்’ உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் பங்கேற்பதாக ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்தபோதிலும், பாகிஸ்தான் பிரதமர் மட்டும் அழைப்பு கிடைத்தும் 3 நாள்களாக தனது வருகை குறித்து பதிலளிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பங்கேற்பார் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தியாவுக்கு திங்கள்கிழமை வரும் பிரதமர் ஷெரீஃப் தலைமையிலான குழுவில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், வெளியுறவு செயலர் ஏஜாஸ் சௌத்ரி, சிறப்பு உதவியாளர் தாரீக் ஃபதிமி ஆகியோரும் இடம்பெறுவார்கள் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
சுதந்திரமான முடிவு: “இந்தியா செல்வது என்பது பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சுதந்திரமான முடிவு என்று அந்நாட்டில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. ஷெரீஃபின் இந்தியப் பயணம் குறித்து அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
“பாகிஸ்தான் உளவு அமைப்பை விமர்சித்த முன்னணி செய்தித் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் பிரச்னையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளைப் புறந்தள்ளிவிட்டு தொலைக்காட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இந்தியா செல்ல ஷெரீஃப் எடுத்த முடிவு, தாம் எந்தவித நிர்பந்தத்திலும் இல்லை என்பதையும், யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை என்பதையும் காட்டுவதாக அமைந்துள்ளது.
ராணுவத் தலைவரிடமும் சம்மதம்: இந்தியா செல்ல நவாஸ் ஷெரீஃப் எடுத்த முடிவு குறித்து அவரது இளைய சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃபிடம் எடுத்துரைத்து சம்மதிக்க வைத்துள்ளார்.
இருவருக்கும் இடையே அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரு நாட்டு உறவுகள் வலுப்பெறவும், அமைதி ஏற்படுத்தவும் நவாஸ் ஷெரீஃப் இந்தியா செல்கிறார் என்று ஷாபாஸ் ஷெரீஃப் எடுத்துரைத்தார்’ என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
27-இல் பேச்சுவார்த்தை: இந்தியா வரும் ஷெரீஃப் இருதரப்பு நல்லுறவு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான குழு 26ஆம் தேதி இந்தியா வருகிறது. அன்றைய தினம் மோடி பதவியேற்பு விழாவில் அவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
27ஆம் தேதி காலை இந்திய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியை ஷெரீஃப் சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து இரு நாட்டுப் பிரதமர்கள் மத்தியிலான நல்லுறவு பேச்சுவார்த்தை நடைபெறும். செவ்வாய்க்கிழமை மதியம் அவர்கள் பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்கிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் நாடுகள் பங்கேற்பு: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களில் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
ஆப்கானிஸ்தான், இலங்கை, பூடான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
அன்றைய தினம் ஷேக் ஹசீனா அரசு முறைப்பயணமாக சீனாவுக்கு செல்லவுள்ளதால், வங்கதேசத்தின் சார்பில் அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் ஷிரின் ஷர்மீன் சௌத்ரி பங்கேற்பார் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கட்சிகள் ஆதரவு
மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் பிரதமர் எடுத்த முடிவுக்கு அந்நாட்டு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சையத் குர்ஷீத் ஷா, “ஷெரீஃபின் இந்தப் பயணம் சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த உதவும்’ என்று கருத்து தெரிவித்ததாக ரேடியோ பாகிஸ்தானில் ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது.
ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் ஃபசலின் தலைவர் ஃபசல்உர் ரஹமான் கூறுகையில், “இந்தியாவின் அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டதின் மூலம், அனைத்துப் பிரச்னைகளையும் அமைதியாக தீர்க்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.
அவாமி தேசிய கட்சித் தலைவர் குலாம் அகமது பிலோர் கூறுகையில், “நவாஸ் ஷெரீஃப் சரியான முடிவு எடுத்துள்ளார்’ என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் தெஹரீக்-இ- இன்சாஃப் கட்சியின் தலைவர் மக்தூம் ஜாவீத் ஹஸ்மி கூறுகையில், “பாகிஸ்தான் நலனுக்காக ஷெரீஃப் இந்தியா செல்கிறார். இந்தப் பயணத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் இடையேயான முக்கிய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்’ என்றார்.
மோடிக்கு வாக்களிக்காதே முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு போக சொன்னார்கள், பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு.