மீனவர்களை விடுவிக்கும் தீர்மானத்தை மோடி வரவேற்பு

modi-mahindaஇந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எடுத்துள்ள தீர்மானத்தை இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

நரேந்திர மோடியின் பதவியேற்பு நாளை இடம்பெறவுள்ளது.  இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

இந்தநிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இதனை வரவேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கையும் பாகிஸ்தானும் இந்திய மீனவர்களை விடுவிக்க எடுத்துள்ள முடிவை தாம் வரவேற்பதாக தமது டுவட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுதலை

  • கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு நாடு திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை தங்களது உடமைகளுடன் பேருந்தில் ஏறிய இந்திய மீனவர்கள்.
  • கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு நாடு திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை தங்களது உடமைகளுடன் பேருந்தில் ஏறிய இந்திய மீனவர்கள்.

 

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்சவும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் கலந்துகொள்ள உள்ள நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக அந்த இரு நாடுகளின் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ச உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சகம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இவ்வாறு ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததை அடுத்து, இலங்கை சிறையில் இருந்த இந்திய மீனவர்கள் சிலரை விடுதலை செய்து அந்நாட்டு அதிபர் ராஜபட்ச மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் சிறையில் இருந்தும் மீனவர்கள் விடுதலை: இந்நிலையில், பாகிஸ்தான் சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் 151 பேர் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

கராச்சியின் மாலீர் சிறையில் இருந்து 59 பேரும், சிந்து மாகாணம் ஹைதராபாதில் உள்ள நாரா சிறையில் இருந்து 92 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கராச்சியில் உள்ள மாலீர் சிறையின் கண்காணிப்பாளர் கூறுகையில், “”உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் எழுத்துப்பூர்வமான உத்தரவின் பேரில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்” என்றார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் இருந்து லாகூரை ஒட்டியுள்ள வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 229 இந்திய மீனவர்களும், அந்நாட்டின் கட்டுப்பாட்டில் 780 படகுகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: