வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் தொடங்கியது

ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய கொடியோன் ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் தொடங்கியது.

இராஜபக்சே இந்திய மண்ணில் கால் வைப்பதை எதிர்த்து, இன்று 26.5.2014 தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கொண்டிருக்கும்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில், மதிமுக  கழகப் பொதுச்செயலாளர் வைகோ முழக்கங்களை எழுப்புகிறார்.  டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான
போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்சேவுக்கு எதிராக கர்நாடகவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இன்று மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி டெல்லியில் திங்கள்கிழமை பதவியேற்க இருக்கிறார். அவரது பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ராஜபக்சேவின் வருகைக்கு கர்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.

கோலார் தங்கவயல் தமிழ்ச்சங்க தலைவர் கலையரசன் கூறியபோது, “2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணமான ராஜபக்சே அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மனிதநேய அமைப்புகளில் அவர் மீது வழக்குகள் விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்”என்றார்.

பெங்களூர் டவுன் ஹால் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் விடுதலைக் கழகம், நாம் தமிழர் , உலகத் தமிழ் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

TAGS: