“மஹிந்தவுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்” : என் ராம்

thehinduஇந்தியாவில் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவை ஓரளவுக்கு சிறியதாக உள்ளதே தவிர, அவர்கள் கூறியபடி புரட்சிகரமான வகையில் சிறியதாக இல்லை என்று ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அமைச்சரவை அனுபவம் இல்லாத பலர் இம்முறை பதவி பெற்றுள்ளனர் என்றும், தொடர்பில்லாத சில முக்கியமான அமைச்சுக்களை ஒரே அமைச்சரிடம் கொடுத்துள்ளது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

மோடி தலைமையிலான அமைச்சரவையில் மதச்சிறுபான்மையினர், வடகிழக்கு மாநிலம், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்றும், அதில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ராம் தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்குபெற்றது ஒரு சிறப்பான அம்சம் எனவும், அது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு என்றும், அதை அடித்தளமாகக் கொண்டு முன்னேறங்களை காண வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கையில், தமிழ் மக்களுக்கு, உரிய அதிகாரப் பகிர்வை அளிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசோசனையும் அறிவுரையும் வழங்க வேண்டும் எனவும் என் ராம் கூறுகிறார்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா போயிருக்கலாம் என்றும், மாநில அரசியலைக் கருத்தில் கொண்டே அவர் எச்சரிக்கையாக ஒரு முடிவை எடுத்துள்ளார் என்றும், அது புரிந்து கொள்ளக் கூடியதே எனவும் அவர் சொல்கிறார்.

தமிழகத்துக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, போதுமானதாக இல்லை, இது வருந்தக் கூடிய விஷயமாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், வேறு வழியில்லை எனவும் அவர் தமிழோசையிடம் கூறினார். -BBC

TAGS: