ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: பிரிவு 370 குறித்து விவாதிக்க அரசு தயார்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370-ன் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமரின் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இது குறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து மாநில பாஜக பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசித்துள்ளது. இதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கில் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவற்றில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பான எங்களது நிலைப்பாட்டை அவர்களுக்கு புரிய வைத்துள்ளோம்.

இந்த விவகாரத்தைப் பொருத்தவரை அவரது (மோடியின்) நோக்கமே, நாங்கள் முன் வைக்கும் விவாதத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 பிரிவின் பாதகங்கள் குறித்து நம்பிக்கையில்லாதவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.

இது குறித்து நாங்கள் விவாதிக்காமல், ஆலோசிக்காமல் இருந்தால் அந்த விதியை பற்றி அறியாதவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்?

இந்த விவகாரத்தை கவனத்துடன் கையாளும் நாங்கள், திறந்த மனத்துடன் ஜனநாயக நெறிமுறையில் நடக்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எங்களுடைய எண்ணத்தை யார் மீதும் திணிக்க விரும்ப மாட்டோம் என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

ஒமர் அப்துல்லா எதிர்ப்பு: இதனிடையே, ஜிதேந்திர சிங்கின் கருத்துக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: காஷ்மீரத்தை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே அரசியல் சாசன ஊடகமாக 370ஆவது பிரிவு திகழ்கிறது. இந்தப் பிரிவை திரும்ப பெறுவது குறித்த பேச்சு பொறுப்பற்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TAGS: