என் குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன்: வைகோ ஆவேசம்

vaikoமதிமுக கூட்டத்தில் பேசிய வைகோ எனது மகனுக்கு கட்சியில் எந்த பதவியும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்துள்ளது.

அப்போது வைகோ பேசுகையில், வெற்றி தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அதிமுகவும், மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு முன்பும், திமுக தோற்று இருக்கிறது.

மேலும், வரும் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

பாஜக கூட்டணியில் நாம் தொடர்ந்து நீடிக்கிறோம், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக அங்கம் வகிப்பதை பாஜக தலைவர்கள் நம்மை மரியாதையுடன் நடத்துகிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் நமக்கு ஏற்பட்ட தோல்வி அவர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி நமது எதிர்ப்பை தெரிவித்தோம்.

ராஜபக்சே பங்கேற்றதால் மோடி பதவி ஏற்பு விழாவையும் புறக்கணித்தோம். ஈழத்தமிழர்களுக்கான நமது செயல்பாடு தொடரும்.

மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசு மூலம் தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வரவேண்டும். தமிழக நலனுக்காக மத்திய அரசை பயன்படுத்தும் வகையில் நாம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

2016ல் மதிமுக ஆட்சி அமைக்கும், இதற்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் தோற்று விட்டதால் நான் வேறு மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்சபை எம்.பி. ஆகி பாராளுமன்றம் செல்வேன் என்று கூறுகிறார்கள், அதை நான் விரும்பவில்லை.

தமிழக மக்களுக்காக அரசியலில் ஈடுபட்டேன். அவர்களுடைய கோரிக்கைக்காக போராடி வருகிறேன். எனவே, வேறு மாநிலத்தில் இருந்து மேல்–சபை எம்.பி.யாகி அந்த மாநிலத்துக்காக என்னால் பேச முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வைகோவின் மகன் துரை வையாபுரி நடந்த பாராளுமன்ற தேர்தலில், விருதுநகர் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்தார் எனவே, அவருக்கு கட்சி பதவி வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் மதிமுக பிரநிதிதிகள் சிலர் வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த வைகோ, கட்சியில் துரை வையாபுரிக்கு எந்த பதவியும் வழங்க தேவை இல்லை,அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இல்லை.

மேலும், நான் போட்டியிட்டதால் மகன் என்ற முறையில் எனக்காக பிரசாரம் செய்தார் என்றும் குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்

TAGS: