நாடு முழுவதும் காங்கிரஸின் படுதோல்விக்கு நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமே காரணம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. காங்கிரஸின் வாக்கு வங்கி 4.3 சதவீதமாக சரிந்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் வியாழக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதற்கு பதிலடியாக தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் காங்கிரஸின் தோல்விக்கு ப. சிதம்பரமே காரணம் என 35 மாவட்டத் தலைவர்கள், 19 மாநிலப் பொதுச்செயலாளர்கள், 9 மாநில துணைத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:
அகில இந்திய அளவில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டது மிகப்பெரிய தவறாகும். வரும் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தங்களுக்குத் தேவையான விளக்கங்களைப் பெற்றிருக்கலாம். இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் கட்சிக்காக என்ன வேலை செய்தார்கள்? தேர்தலின்போது சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற எந்தக் கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்கவில்லை.
தமிழ் அமைப்புகள் சத்தியமூர்த்தி பவன் முன்பு போராட்டங்கள் நடத்தியபோது, அது குறித்து மாநிலத் தலைவரிடம் ப. சிதம்பரம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தியவர் ஞானதேசிகன்.
இந்தத் தேர்தலில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு காரணமான பொருளாதார வீழ்ச்சியையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த தவறியது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் என்பதை அனைவரும் அறிவர்.
தெலங்கானா தனி மாநில அறிவிப்பை வெளியிட்டு ஆந்திராவில் பலமாக இருந்த காங்கிரûஸ ஒன்றுமில்லாமல் செய்தவர் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம்.
கடந்த 2 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்துள்ளார். மகன் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியைத் தவிர வேறு எங்கும் அவர் பிரசாரம் செய்யவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில துணைத் தலைவர்கள் சி. ஞானசேகரன், சாருபாலா தொண்டைமான், மாநில பொருளாளர் கோவை தங்கம், மாநிலப் பொதுச்செயலாளர்கள் கே. சிரஞ்சீவி, நாசே ராமச்சந்திரன், தாம்பரம் நாராயணன், சக்திவடிவேல், விடியல் சேகர், ஹசன் அலி, மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ (வட சென்னை), என். ரங்கபாஷ்யம் (மத்திய சென்னை), ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அணி திரளும் நிர்வாகிகள்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகன் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக பிரசாரம் செய்த ப. சிதம்பரம், 3 நாள்கள் மட்டும் தனது ஆதரவாளர்கள் போட்டியிடும் சில தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
இதற்கு ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் ஆதரவாளர்களும், எந்த அணியிலும் இல்லாமல் செயல்படும் கே. சிரஞ்சீவி போன்ற நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் காங்கிரஸூக்கு ஏற்பட்டுள்ள மோசமான தோல்விக்கு உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மாநிலங்களவை உறுப்பினர் கனவில் இருக்கும் சிதம்பரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வெற்றி பெற்றால் அது என்னால் , தோல்வி கண்டால் அது மற்றவரால் ? இதுதான் அரசியல் களம்!