அமைச்சர் குழுக்கள் கலைப்பு: மோடி அதிரடி

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களின் குழுக்கள் மற்றும் உயரதிகார அமைச்சர்களின் குழுக்கள் கலைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார். அரசின் கொள்கை முடிவுகளை விரைந்து எடுப்பதற்காகவும், அமைச்சகங்களின் பொறுப்புகள் மற்றும்  அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களுடனும் பிரதமர் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொள்ளும் புதிய கொள்கை முடிவுகளை அமைச்சர்கள் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்பாக அவற்றில் உள்ள சிக்கலான விஷயங்களை ஆராய்ந்து இறுதி செய்வதற்காக 30 குழுக்களை மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்தது. இதில் 9 உயரதிகார அமைச்சர்களின் குழுக்களும் (ஈஜிஓஎம்), 21 அமைச்சர்களின் குழுக்களும் (ஜிஓஎம்) அடங்கும். பெரும்பாலான உயரதிகார அமைச்சர்களின் குழுக்களுக்கு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமை வகித்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயம், தொலைதொடர்புத்துறை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகளை இந்தக் குழுக்கள் மேற்கொண்டன. நீர் மேலாண்மை, தேசிய போர் நினைவிடம் அமைத்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பான முடிவுகள் உள்ளிட்டவை பிற அமைச்சர் குழுக்களின் வரம்புகளில் இருந்தன.

முன்னதாக, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில்தான் முதன்முறையாக இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டன. மத்தியில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை திருப்திப்படுத்துவதற்காக ஆளும் கட்சிகள் இந்தக் குழுக்களை பயன்படுத்தி வந்தன.

இதில், உயரதிகார அமைச்சரவைக் குழுக்களில் எடுக்கப்படும் முடிவுகளை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு (கேபினட்) ஒப்புதல் தருவது வெறும் சம்பிரதாயமாகவே இருந்தது. அந்த அளவுக்கு உயரதிகாரக் குழுக்கள் செல்வாக்கும் அதிகாரமும் பெற்றவையாக இருந்தன. அதேநேரத்தில், அமைச்சர் குழுக்களுக்கு இத்தகைய செல்வாக்கு இல்லை. இந்தக் குழுக்களின் முடிவுகள் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் ஒப்புதலைப் பெற்றபிறகே செயல்படுத்தப்படும்.

இந்நிலையில் இந்தக் குழுக்களை பிரதமர் மோடி கலைத்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் அனைத்து அமைச்சகங்களின் திட்டங்களும், கொள்கை முடிவுகளும் அவரது நேரடி கவனத்துக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் அமைச்சர்கள் மீதான தனது பிடியை மோடி மேலும் இறுக்கியுள்ளார் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பதவியேற்ற 100 நாள்களுள் அமைச்சர்கள் தங்களது துறைகளில் மேற்கொள்ள உள்ள முக்கியப் பணிகளை பட்டியலிடவேண்டும் என்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான 10 அம்ச கட்டளைகளை வியாழக்கிழமை (மே 29) வெளியிட்ட மோடி தற்போது அமைச்சர்களின்  குழுக்களை கலைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமைச்சர்களின் குழுக்கள் கலைக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி அனைத்து அமைச்சர்களின் குழுக்களும் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் குழுக்களிடம் நிலுவையில் உள்ள விவகாரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்களின் பரிசீலனைக்கு விடப்படுகிறது. இந்த விவகாரங்களில் அந்தந்த துறைகள் தங்கள் அமைச்சக அளவிலேயே முடிவெடுத்து பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். மேலும், எந்தவொரு திட்டம் தொடர்பான முடிவை எடுப்பதில் சிரமம் இருந்தால் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதில் மத்திய அமைச்சரவைக் குழு செயலகமும், பிரதமர் அலுவலகமும் உதவி செய்யும். இதன்மூலம் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்பையும், அதிகாரத்தையும் அளிப்பதற்காகவே இந்த நடவடிக்கையை பிரதமர் எடுத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TAGS: