திருப்பதி: ‘திருமலை ஏழுமலையானின் சொத்துகள் சீமாந்திராவுக்கே சொந்தம்’ என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திர மாநிலம், நாளை, இரண்டாக பிரிய உள்ளது. இரண்டு மாநிலங்களுக்காக, ஆந்திராவில் உள்ள, அனைத்து துறைகளும் சமமாக பிரிக்கப்படுகின்றன.
சேஷாசலம் மலை:திருமலை – திருப்பதி கோவில் உள்ள சேஷாசலம் மலை, சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இதில், திருமலை ஏழுமலையான் சொத்துகளை பிரிப்பது கடினம் என்பதால், இதன் முழு உரிமையை, சீமாந்திராவிடம், ஆந்திர அரசு வழங்கி உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திரா ஒன்றாக இருந்தபோது, திருமலை – திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள், தெலுங்கானாவிலும் விரிந்து பரந்து இருந்தது. மாநிலத்தை, இரண்டாக பிரிக்கும் போது, தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகளை, அந்தந்த மாநிலங்களுக்கு பிரித்தளிக்க முடியாது. ஏனெனில், அரசு சொத்துகளை மட்டும் தான், மாநிலங்களுக்கு பிரித்தளிக்க முடியும். தேவஸ்தானம் ஒரு தனியார் நிறுவனம் மட்டுமல்லாமல், அதன் சொத்துகள் அனைத்தும், பக்தர்கள் நன்கொடையாக வழங்கியவை. அதனால், சொத்துகள் அனைத்தும் தேவஸ்தானத்தை மட்டுமே சாரும்.
சீமாந்திரா:திருமலை, புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள ஆந்திரா சீமாந்திரா பகுதியில் உள்ளதால், இதன் மீது முழு பொறுப்பும் ஆந்திர அரசிற்கு உண்டு. தேவஸ்தானம் கட்டிய சத்திரங்கள், கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தையும், அந்த அமைப்பே பராமரித்து வருகிறது. இதனால், தேவஸ்தானத்தின் சொத்துகளை, மற்றவர்களுக்கு பங்கிட முடியாது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
4300 ஏக்கர் நிலம்:கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, பத்மநாபசாமி சொத்துகளுடன் போட்டியிடக் கூடிய தகுதி, திருமலை ஏழுமலையானுக்கு மட்டுமே உண்டு. ஏழுமலையானின், மொத்த சொத்துக்களின் மதிப்பு, 2 லட்சம் கோடி ரூபாய். கடந்த, 2009ல் நடத்திய கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும், தேவஸ்தானத்திடம், 4,300 ஏக்கர் நிலம் உள்ளது. அரசு கணக்குப்படி, இதன் மதிப்பு, 33 ஆயிரம் கோடி ரூபாய். சந்தை மதிப்பின்படி, இதன் மதிப்பு, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கப்பட்ட, தங்க, வைர, வைடூரியம், மாணிக்கம், மரகதம், முத்து, பவளம், நகைகள், 11 டன் அளவுக்கு உள்ளது. இவற்றின், மொத்த மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.