29 இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் கைது

tamil_fishermenஇலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து, மீன்பிடித்த 29 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

ஆறு படகுகளில் வந்த இந்த மீனவர்கள் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, மேலும் ஒரு படகு கடலில் தத்தளிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்தப் படகையும் அதில் உள்ள மீனவர்களையும் மீட்டு வருவதற்கு, கடற்படையினர் அங்கு விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய 6 படகுகளையும் மன்னார் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்து, காவல்துறையினரின் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீன் உற்பத்தி காலத்தை முன்னிட்டு மீன்பிடித் தொழில் நிறுத்தப்படும் காலம் முடிவடைந்து இந்திய மீனவர்கள் கடலுக்குத் திரும்பிய முதல் நாளன்றே இந்த 29 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட சூழலில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. -BBC

தமிழக மீனவர்கள் கைதுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்

தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளதைக் கடுமையாக கண்டித்துள்ள ஜெயலலிதா, இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் 45 நாட்கள் மீன்பிடி தடைக்கு பிறகு முதல் நாளாக கடலுக்கு சென்ற 33 பேரையும் அவர்கள் சென்ற 7 படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்து தடுத்து வைத்துள்ளது மிகவும் மனவேதனையை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில், பலமுறை முன்னாள் பிரதமருக்கு, கடுமையாக ராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும், இப்படியான நிகழ்வுகளை தடுக்கும்படி கோரியும் பல தடவைகள் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

தற்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது, மீனவ சமூகத்தில் ஒரு பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது என்றும், மத்தியில் புதிய அரசு வந்தபிறகு, இப்படியான தாக்குதல்கள் இல்லாதொழிந்து போகுமென்றும் அந்தச் சமூகத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்றும் தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டமைப்பின் அரசாங்கம், இப்படிப்பட்ட சம்பவங்கள் குறித்து எடுத்த நடவடிக்கைகள் வலுவில்லாமல் இருந்தன என்றும், அது இலங்கை கடற்படைக்கு தைரியமூட்டி, அவர்கள் அப்பாவி தமிழக மீனவர்களை அவர்களின் பாரம்பரிய கடல் பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு வழி வகுத்தது என்றும் ஜெயலலிதா நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

மோடியின் தலைமையிலான புதிய அரசு, பழைய அரசின் நிலைப்பாட்டிலிருந்து விலகி மீனவர்கள் விஷயத்தில் ஒரு தீர்க்கமான, இறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தமிழக முதல்வர் தனது கடித்த்தில் கூறியுள்ளார். -BBC

TAGS: