தெலங்கானா மாநிலம் இன்று உதயம்

நாட்டின் 29ஆவது மாநிலமாக உதயமாகவுள்ள தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை பதவி ஏற்க உள்ளார்.

ஆந்திரப் பிரிவினையை வலியுறுத்தி அந்த மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, அண்மையில் தெலங்கானா மாநில பிரிவினைக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து 29ஆவது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவாகவுள்ளது. இந்த மாநிலத்தின் முதல் முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி ஏற்க உள்ளார்.

ஹைதராபாதிலுள்ள ஆளுநர் மாளிகையில் காலை 8.15 மணிக்கு முதல்வர் பதவி ஏற்பு விழா தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி, தெலங்கானா மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாக விலக்கிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 63 தொகுதிகளில் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றது.

ஆந்திரத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள இ.எஸ்.எல்.நரசிம்மன், முதல்வரின் பதவி ஏற்பு விழாவுக்கு முன், தெலங்கானா மாநிலத்துக்கும் ஆளுநராக பதவி ஏற்க உள்ளார். ஏற்கெனவே மத்திய உளவுத்துறை தலைவராக நரசிம்மன் பதவி வகித்துள்ளார்.

முதல்வராக பதவி ஏற்ற பின், ஹைதராபாதிலுள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் தெலங்கானா மாநில உருவாக்க தின விழாவில் சந்திரசேகர ராவ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசில், ஆந்திர சட்டப்பேரவையில் டிஆர்எஸ் கட்சியின் அவைத்தலைவராக இருந்த இ.ராஜேந்தர், சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரீஷ் ராவ், சட்ட மேலவை உறுப்பினர் மஹ்மூத் அலி, மூத்த தலைவர் போசராம் ஸ்ரீநிவாச ரெட்டி மற்றும் நரசிம்ம ரெட்டி ஆகியோர் அமைச்சர்களாக இடம் பெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

டிஆர்எஸ் கட்சி பெண் எம்எல்ஏக்களான கொண்டா சுரேகா, பத்மா தேவேந்தர் ரெட்டி மற்றும் கோவா லட்சுமி ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தெலங்கானா அமைச்சரவை இந்த மாத இறுதியில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஆந்திரப் பிரிவினையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் பதிவு செய்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதோடு, இந்தப் போராட்டத்தின்போது உயிரிழந்த தெலங்கானா பகுதியினருக்கு சலுகைகளையும் சந்திரசேகர ராவ் அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றி வரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் சர்மா, தெலங்கானா மாநில தலைமைச் செயலாளராகவும், ஹைதராபாத் நகர காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள அனுராக் சர்மா, தெலங்கானா மாநில காவல்துறைத் தலைவராகவும் பொறுப்பேற்கலாம் என்று கருதப்படுகிறது.

44 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒதுக்கீடு: புதிதாக உருவாக்கப்படும் தெலங்கானா மாநிலத்துக்கு 44 ஐஏஎஸ் அதிகாரிகள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஆந்திர மாநிலத்துக்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட, 44 ஐஏஎஸ் அதிகாரிகள் தெலங்கானா மாநிலத்துக்கு தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த மாநிலத்துக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் இறுதி நியமனம், அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்குப் பின்னர் நியமிக்கப்படுவார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்- பாஜக: இதற்கிடையே “தெலங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரசேகர ராவ் மற்றும் சீமாந்திரத்தின் மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு ஆகியோர் விட்டுக்கொடுத்து செல்லும் வழிமுறைகளை பின்பற்றினால், இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள முடியும்’ என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் தெரிவித்துள்ளார்.

TAGS: