இந்தியாவில் மேலும் 16 அணுஉலைகளை அமைக்க ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் காடகின் தெரிவித்ததாவது:
பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷியாவுக்கு நல்லுறவு உள்ளது. அவருக்கு எதிராக எந்த தடைகளையும் ரஷியா விதித்தது கிடையாது (குஜராத் கலவரத்தை தொடர்ந்து அந்த மாநில முதல்வராக இருந்த மோடிக்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல மேலைநாடுகள், தங்கள் நாட்டுக்கு அவர் வருவதற்கு தடை விதித்தன என்பதை இவ்வாறு அவர் தெரிவித்தார்). ரஷியாவில் அவர் 3 முறை வெற்றிகரமாக பயணம் செய்துள்ளார். அதனை வைத்துப் பார்க்கையில், அவருடன் எங்கள் நாட்டுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றே கருதுகிறோம்.
அவரது ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, குறிப்பாக பாதுகாப்பு துறை மற்றும் அணுசக்தி துறையில் இருக்கும் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என நம்புகிறோம். எரிசக்தி துறையில் ரஷியா ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. இந்தியாவில் 14 முதல் 16 அணுஉலைகளை அமைக்க ரஷியா விரும்புகிறது.
5ஆம் தலைமுறை போர் விமானம் கட்டுதல் உள்பட இந்தியாவுடன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள ரஷியா விரும்புகிறது. அகுலா நீர்மூழ்கி கப்பலை இந்தியாவுக்கு ரஷியா குத்தகைக்கு வழங்கும்படி எந்த வேண்டுகோளும் வரவில்லை.
இருதரப்பு உறவு தொடர்பாக இந்தியாவின் புதிய தலைமையுடன் (பிரதமர் நரேந்திர மோடி) பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ரஷிய துணைப் பிரதமர் திமித்ரி ரோகோஜின், இந்த மாதம் இந்தியா வருவார் என எதிர்பார்க்கிறோம் என்று அலெக்சாண்டர் காடகின் தெரிவித்தார்.