சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுங்கள்: அகிலேஷ் அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நீடிக்கும் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநிலத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசியதாவது:

நாட்டின் எந்தப் பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றாலும், அனைவருக்கும் அது கவலையைத் தரும். அதுபோல்தான் உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் சம்பவங்கள், அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆதலால், இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா? என்று கேட்கிறீர்கள். குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மிகப்பெரிய முடிவாகும். அதுகுறித்து என்னால் கருத்து தெரிவிக்க இயலாது.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களுக்கு எதிராக அந்த மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தானாக முன்வந்து எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது. ஏனெனில் மாநிலங்களில் உள்ள விசாரணை அமைப்புகள் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கை உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் பாலியல் சம்பவங்களுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதாகவும், பிற மாநிலங்களில் நடைபெறும் அதுபோன்ற சம்பவங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வெட்கக்கேடான சம்பவங்களை எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கக் கூடாது. நாட்டின் எந்தப் பகுதியானாலும் சரி, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்ற வகையிலேயே எண்ண வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை உத்தரப் பிரதேச அரசால் தடுக்க முடியாதா? என்று ரிஜிஜூ கேள்வியெழுப்பினார்.

TAGS: